இணையத்தின் மூலம் அடையலாம் இவ்வளவு நன்மைகளா!!

3 weeks ago 6

இணையத்தின் பொருட்கள் மூலம் விவசாயத் தொழிலில் என்னென்ன மாற்றங்களை நிகழ்த்தலாம் என்பது குறித்து தர்மபுரி மாவட்ட வேளாண் துறை அலுவலர் வி.குணசேகரன் கடந்த இதழில் சில தகவல்களைத் தெரிவித்து இருந்தார். அதன் தொடர்ச்சியை இந்த இதழில் காணலாம். நவீன விவசாயத்தில் பாய்ச்சலை நிகழ்த்தும் இணையத்தின் பொருட்களை இவ்வாறு வகைப்படுத்தலாம்.

*உணர்விகள் (மண்ணின் கார அமில நிலை, ஈரப்பதம், வெப்பநிலை போன்ற அம்சங்கள் குறித்து தெளிவான விளக்கம் கொடுப்பவை)
* தொலைத்தொடர்பு சாதனங்கள்
* இயந்திரக்கைகள் (ரோபோடிக் ஆர்ம்ஸ்)
* தரவுகளைச் சேகரித்து அவற்றை பகுப்பாய்வு செய்யும் மென்பொருட்கள்
* செயற்கைக்கோள்கள் மற்றும் இலகு வானூர்திகள் (ட்ரோன்கள்). இவை மண்ணுக்கு மேலோ பறந்து மண்ணில் நிகழும் மாற்றங்களை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டிருக்கும் அதிஅற்புதக் கருவிகள்.

இணைய பொருட்களின் பயன்பாட்டுக்கு சில எடுத்துக்காட்டுகள்:

காலநிலைக் கண்காணிப்பு கருவிகள்:

வானிலை ஆய்வுக் கருவிகள்தான் இணையப் பயன்பாட்டில் மிக முக்கியத்துவம் பெற்றவையாக திகழ்கின்றன. ஒவ்வொரு நாளும் வானிலை பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் உணர்விகள் பல இடங்களில் வைக்கப்படுகின்றன. இந்த உணர்விகளின் மூலம் தரவுகள் பெறப்பட்டு இணையத்திற்கு அனுப்பப்படுகிறது. இந்த தகவல்களின் மூலம் பயிர்களுக்கு என்ன தேவை? அதை எப்போது கொடுக்க வேண்டும்? எந்த அளவில் கொடுக்க வேண்டும்? என்பதை தெளிவாகமுடிவு செய்துகொள்ளலாம்.

பசுமைக்குடில்கள் தானியக்கம்
(கிரீன் ஹவுஸ் ஆட்டோமேஷன்):

பயிர்களுக்குத் தேவையான காலநிலை, சத்துகளை சரிவிகிதமாக வழங்கும் வல்லமை கொண்டவை பசுமைக்குடில்கள். இவை பல மடங்கு விளைச்சலை வழங்கி, பல மடங்கு லாபத்தையும் விவசாயிகளுக்கு பெற்றுத் தரும். இத்தகைய பசுமைக் குடில்களைத் திறம்பட நிர்வகிக்க அதிகளவில் மனித சக்தி தேவைப்படும். ஆனால் இணையப் பொருட்களின் தொழில்நுட்பம் பசுமைக் குடில்களுக்கு எப்போது என்ன தேவை? என்பதை எளிதாக தெரிவித்து முடிவெடுக்க பெரிய அளவில் உதவி புரியும். வெப்பநிலை, ஈரப்பதம், வெளிச்சம் உள்ளிட்ட சுற்றுப்புறம் குறித்த தரவுகளை ஒருங்கிணைத்து உடனடி முடிவுகள் எடுக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தும்.

பயிர் மேலாண்மை

இன்றைய விவசாயத்தை விவேகமாக செய்ய விரும்புகிறவர்கள் நாடும் ஒரு அற்புத முறை துல்லியப் பண்ணையம் முறை. இந்த முறையில் தேவையான நேரத்தில், தேவையான இடத்தில் நீர்ப்பாசனம், பயிரூட்டம், பயிர்ப் பாதுகாப்பு போன்றவற்றை மேற்கொண்டு ஆரோக்கியமான பயிர் வளர்ச்சி மற்றும் உற்பத்திக்கு இணையத்தின் பொருட்கள் உதவிபுரிகின்றன.

கால்நடை நிர்வாகம்

கால்நடைகளின் ஆரோக்கியத்தைக் கண்காணித்தல், அதனைப் பதிவு செய்தல், தீவன மேலாண்மை, பால் பண்ணை நிர்வாகம், போக்குவரத்து, தடுப்பூசிகள் இடுதல், நோய் பிடித்த கால்நடைகளை கண்டறிந்து அவற்றை ஆரோக்கியமான கால்நடைகளாக பேணி வளர்த்தல் போன்ற நடைமுறைகளை முறையாக கையாளும் வகையில் வானத்துடன் கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் ஆட்கள் செலவினத்தைக் குறைப்பது போன்ற எண்ணற்ற அனுகூலங்களைக் கால்நடை வளர்ப்பாளர்கள் அடைய முடியும்.

மொத்த உற்பத்தி மேலாண்மை

உணர்விகளை ஆங்காங்கே தேவையான இடத்தில் பொருத்தி, அதிலிருந்து கிடைக்கும் தரவுகளை ஒருங்கிணைத்து, ஆராய்ந்து உண்மை நிலவரத்தை உடனுக்குடன் தெரிந்துகொண்டு பண்ணையின் ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் இணைய வழியாகவே செயல்படுத்தலாம். இதன்மூலம் உற்பத்தி மேலாண்மையை திறம்பட கையாளலாம். இது தவிர வாகன மேலாண்மை, கிடங்கு மேலாண்மை போன்ற பல பணிகளையும் எளிதாக்கலாம்.நவீன தொழில்நுட்பத்தின் மூலம் விவசாயத்தில் இழப்பினைத் தடுத்து, உற்பத்தியைப் பெருக்கி, அதனை திறம்பட விநியோகமும் செய்யலாம். பண்ணையின் வரவு, செலவு கணக்கினை திட்டமிட்டு, உரிய தரவுகளை அறிந்து இழப்பினைத் தவிர்க்கலாம். விவசாயம் லாபம் இல்லை என்று சொல்லும் விவசாயிகளுக்கு மத்தியில் விதை ஒன்று போட்டால் தானியம் பல விளையும் என உணர்ந்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். விவசாயத்தில் அவ்வப்போது நிகழும் வீண் செலவுகளைக் குறைத்தால், லாபம் என்பது நிச்சயமே. இதற்கு விவசாயம் செய்யும் விவசாயிகள் மட்டுமே உழைத்துப் பயனில்லை. உணவு என்பது அனைவருக்கும் பொதுவானது. எனவே விவசாயி சோர்வடையாமல் பார்த்துக்கொள்வது பூமியில் வாழும் ஒவ்வொருவரது கடமை என்பதை அனைவரும் உணர்ந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும். நன்கு படித்த மென்பொருள் வல்லுநர்களும் உணவு உற்பத்தியினைப் பெருக்க தங்களது நேரத்தை ஒதுக்கினால் நஞ்சற்ற லாபகரமான உணவு உற்பத்தி சாத்தியம்தான்.

 

The post இணையத்தின் மூலம் அடையலாம் இவ்வளவு நன்மைகளா!! appeared first on Dinakaran.

Read Entire Article