மும்பை,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை நாக்பூரில் நடக்கிறது.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகிய சீனியர் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக இந்திய அணி விளையாடும் இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நாளை நாக்பூரில் நடைபெற உள்ள இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான இந்தியாவின் விளையாடும் வீரர்களை (ஆடும் லெவன்) இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தேர்வு செய்துள்ளார். அதன்படி தொடக்க வீரர்களாக ரோகித் மற்றும் சுப்மன் கில்லை தேர்வு செய்த மஞ்ச்ரேக்கர் மிடில் ஆர்டரில் விராட், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்டை தேர்வு செய்துள்ளார்.
தொடர்ந்து ஆல்ரவுண்டர்களாக ஹர்த்திக் பாண்ட்யா, ஜடேஜா, வாஷிங்டன் சுந்தரை தேர்வு செய்த மஞ்ச்ரேக்கர் பந்து வீச்சாளர்களாக குல்தீப் யாதவ், முகமது ஷமி மற்றும் அர்ஷ்தீப் சிங்கை தேர்வு செய்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 14 விக்கெட்டுகள் வீழ்த்தி தொடர் நாயகன் விருது வென்ற வருண் சக்கரவர்த்தியை மஞ்ச்ரேக்கர் ஆடும் லெவனில் தேர்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மஞ்ரேக்கர் தேர்வு செய்த இந்திய ஆடும் லெவன் விவரம்: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்த்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.