
லண்டன்,
10வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஜூன் 12 முதல் ஜூலை 5ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 12 அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 4 அணிகள் தகுதிச்சுற்றின் மூலம் தேர்வாகும்.
அதன்படி ஆசிய கண்டத்துக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் (யு.ஏ.இ.) - கத்தார் அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த யு.ஏ.இ அணி 16 ஓவர்களில் 192 ரன்கள் குவித்த நிலையில் ஆல் ஆவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் எஷா ரோகித் 113 ரன்களும், தீர்த்தா சதிஷ் 74 ரன்களும் குவித்தது.
பின்னர் 193 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய கத்தார் அணி 11.1 ஓவர்களில் 29 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் யு.ஏ.இ. 163 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முன்னதாக இந்த ஆட்டத்தில் யு.ஏ.இ. அணியின் 10 வீராங்கனைகளும் 'ரிட்டயர்டு அவுட்' முறையில் வெளியேறினர். அதிலும் தொடக்க வீராங்கனைகள் தவிர மற்ற யாரும் ஒரு பந்தை கூட சந்திக்கவில்லை.
இதற்கான காரணம் என்னவெனில், இந்த ஆட்டத்தில் மழை குறுக்கிட வாய்ப்பு இருந்தது. இதன் காரணமாக இந்த ஆட்டத்தில் வெற்றி பெற யோசித்த யு.ஏ.இ. டாஸ் வென்று அதிரடியாக பேட்டிங் செய்து 16 ஓவர்களில் 192 ரன்கள் குவித்து அசத்தியது. கத்துக்குட்டி அணியான கத்தார் அணிக்கு இந்த இலக்கே போதும் என்று நினைத்த யு.ஏ.இ. அணி இப்படி ஒரு முடிவை எடுத்து வெற்றியும் கண்டுள்ளது.
கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணியில் 10 வீராங்கனைகளும் ரிட்டயர்டு அவுட் ஆன சுவாரசிய சம்பவம் இன்று அரங்கேறியுள்ளது.