![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/07/38021011-untitled-1.webp)
நாக்பூர்,
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி நாக்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 47.4 ஓவர்களில் 248 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பட்லர் 52 ரன்களும், ஜேக்கப் பெத்தேல் 51 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் ஜடேஜா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து 249 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 38.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் சுப்மன் கில் 87 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 59 ரன்களும், அக்சர் படேல் 52 ரன்களும் அடித்து வெற்றிக்கு உதவினர்.
இந்த நிலையில், இந்த போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதால் ஹர்ஷித் ராணா புதிய சாதனை படைத்துள்ளார் . ஹர்ஷித் ராணா தனது முதலாவது டெஸ்டில் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) 3 விக்கெட் எடுத்தார். அறிமுக டி20 போட்டியில் (சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக) 3 விக்கெட் வீழ்த்தினார் . இப்போது தனது முதலாவது ஒரு நாள் போட்டியிலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் . இதன் மூலம் மூன்று வடிவிலான போட்டியிலும் அறிமுக இன்னிங்சிலேயே 3 விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய பவுலர் என்ற பெருமையை ஹர்ஷித் ராணா பெற்றார்.