சென்னை,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி சென்னையில் நாளை நடைபெற உள்ளது. இதனையொட்டி இரு அணி வீரர்களும் இன்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்த பயிற்சியின்போது இந்திய நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் ஆன அபிஷேக் சர்மாவுக்கு கணுக்காலில் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. களத்தில் வலியால் துடித்த அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் இவர் 2-வது போட்டியில் விளையாடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
அபிஷேக் சர்மா முதல் போட்டியில் 20 பந்துகளில் அரைசதமடித்து இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.