
லண்டன்,
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், பர்மிங்காமில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி முதலில் பேட் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 83 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 251 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 99 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 39 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய தரப்பில் நிதிஷ்குமார் ரெட்டி 2 விக்கெட்டும், பும்ரா, ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடும் என்று அனைவரும் நினைத்த வேளையில் அவர்கள் மெதுவாக விளையாடி அவைவரையும் பிராங்க் செய்துவிட்டதாக இந்திய முன்னாள் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். அத்துடன் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியை 350 ரன்களுக்குள் கட்டுப்படுத்தாவிட்டால் இந்தியா வெல்வது கடினம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இங்கிலாந்துக்கு இது ஒரு சிறந்த நாள். இங்கிலாந்து பேஸ்பாலை தொடரும் என்று எல்லோரும் நம்பினர். ஆனால் அவர்கள் பிராங்க்பால் விளையாடி அனைவரையும் ஏமாற்றி விட்டனர். அவர்கள் வழக்கமாக ஒரு ஓவருக்கு 4 - 4.5 என்ற ரன்ரேட்டில் விளையாடுவார்கள். ஆனால் இன்று (அதாவது நேற்று) அவர்கள் ஒரு ஓவருக்கு 3 ரன்கள் என்ற விகிதத்தில் விளையாடினர். ஜோ ரூட் ரன்கள் எடுப்பது அணிக்கு மிகவும் முக்கியம் என்று நான் முன்பு சொன்னேன். தரமான அவர் சரியான நேரத்தில் வந்துள்ளார். அது டெஸ்ட் போட்டி எப்படி விளையாட வேண்டும் என்பதற்கு சிறந்த பாடமாக அமைந்தது. ரூட் திரும்பிவிட்டார்.
இந்த பிட்ச் துணைக் கண்டத்தில் இருப்பது போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.பொதுவாக அங்கே 60 ஓவர்களுக்கு பின்புதான் பந்து மென்மையாகும். ஆனால் ரவீந்திர ஜடேஜா வீசிய ஒரு பந்து ரூட்டின் பேட்டில் கீழே பட்டது. இங்கிலாந்தில் முதல் நாளில் நீங்கள் அது போன்ற பந்துகளை எதிர்பார்க்க மாட்டீர்கள். லார்ட்ஸில் பவுன்ஸ் எப்போதும் ஒரு கவலையாக இருக்கும்.
ஆனால் இந்த ஆடுகளத்தில் மாறுபட்ட பவுன்ஸ் மற்றும் மாறி வேகம் உள்ளது. நிதிஷ் ரெட்டி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியபோது நாங்கள் அதைப் பார்த்தோம். மொத்தத்தில் இந்த பிட்ச் வித்தியாசமான பவுன்ஸ் மற்றும் வேகத்தைக் கொண்டிருக்கிறது. அதனால் இங்கிலாந்தை உங்களால் 350க்குள் சுருட்ட முடியுமா? என்று கேட்பேன். ஏனெனில் இங்கிலாந்து அதிகமாக விளையாடும் போது பிட்ச் மாறலாம்" என்று கூறினார்.