![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/03/37272198-abis.webp)
மும்பை,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. இதில் டாஸ் ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன அபிஷேக் ஷர்மா, அதிரடியில் வெளுத்து கட்டினார். ஆர்ச்சர், ஓவர்டான் ஓவர்களில் சிக்சர் மழை பொழிந்தார். இதனால் ஸ்கோர் மின்னல் வேகத்தில் எகிறியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 9 விக்கெட்டுக்கு 247 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 135 ரன்கள் அடித்தார்.
பின்னர் 248 ரன் இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி ஆடியது. பில் சால்ட் ஒரு பக்கம் அதிரடி காட்ட இன்னொரு பக்கம் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. 10.3 ஓவர் மட்டுமே தாக்குப்பிடித்த அந்த அணி 97 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.
இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக பில் சால்ட் 55 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டும், வருண் சக்ரவர்த்தி, ஷிவம் துபே, அபிஷேக் ஷர்மா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். அபிஷேக் ஷர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் 15 ஓவர்கள் வரை விளையாட வேண்டும் என்ற தம்முடைய குரு யுவராஜ் சிங்கின் ஆசையை இன்று நிறைவேற்றியுள்ளதாக அபிஷேக் தெரிவித்துள்ளார். மேலும் இங்கிலாந்தை பந்துவீச்சை அடித்து நொறுக்கிய தன்னுடைய திட்டம் பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-
"நாட்டுக்காக சதம் அடித்தது எப்போதும் சிறப்பான உணர்வு. இது ஸ்பெஷலானது. இதற்கு முன்பும் நான் தெரிவித்துள்ளேன். என்னுடைய நாள் என்று தெரியும்போது அதில் முதல் பந்திலிருந்தே நான் அதிரடியாக விளையாட முயற்சிப்பேன். இப்படி அதிரடியாக விளையாட வேண்டும் என்றுதான் முதல் நாளிலிருந்து பயிற்சியாளர் மற்றும் கேப்டன் எனக்கு ஆதரவு தருகிறார்கள். அது எனக்கு மிகவும் சிறப்பான விஷயம்.
140 - 150 கிலோமீட்டர் வேகத்தில் எதிரணி பவுலிங் செய்யும்போது நீங்கள் எதற்கும் பின்வாங்காமல் தயாராக இருக்க வேண்டும். நான் பந்தை பார்த்து அதற்கு தகுந்தாற்போல் என்னுடைய ஷாட்டுகளை அடிக்க விரும்பினேன். ஆர்ச்சர் போன்ற உலகத்தரம் வாய்ந்த பவுலரை கவர்ஸ் திசைக்கு மேலே சிக்சர் அடிப்பது மிகவும் ஸ்பெஷலான ஒன்று. ரஷித்துக்கு எதிராக அடிக்க சிக்சர்களும் ஸ்பெஷலானது. நேராக அடித்ததையும் மறக்கவில்லை.
அது நேற்று யுவராஜ் பாஜி குறிப்பிட்ட ஒரு ஷாட். இதற்குப் பின் அவர் மகிழ்ச்சியாக இருப்பார். அவர் எப்போதும் நான் 15 - 20 ஓவர்கள் வரை விளையாடுவதை விரும்புகிறார். கம்பீர் பாஜியும் நான் இதை செய்வதையே விரும்பினார். எனவே இது என்னுடைய நாள் என்று நினைத்து அதில் என்னுடைய திட்டங்களை செயல்படுத்தினேன்" என்று கூறினார்.