முல்தான்: பாகிஸ்தான் அணியுடனான 2வது டெஸ்டில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 239 ரன் எடுத்துள்ளது. தொடக்க வீரர் பென் டக்கெட் சதம் விளாசினார். முல்தான் கிரிக்கெட் அரங்கில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த பாகிஸ்தான் முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 259 ரன் எடுத்திருந்தது. நேற்று நடந்த 2வது நாள் ஆட்டத்தில் அந்த அணி 366 ரன்னுக்கு முதல் இன்னிங்சை இழந்தது (123.3 ஓவர்; அயூப் 77, குலாம் 118, ரிஸ்வான் 41, ஆஹா 31, ஜமால் 37, நோமன் அலி 32). இங்கிலாந்து பந்துவீச்சில் ஜாக் லீச் 4, கார்ஸ் 3, பாட்ஸ் 2, பஷிர் 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து கிராவ்லி, டக்கெட் இணைந்து இங்கிலாந்து இன்னிங்சை தொடங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 73 ரன் சேர்த்தனர். கிராவ்லி 27 ரன் எடுத்து நோமன் அலி பந்துவீச்சில் ரிஸ்வான் வசம் பிடிபட்டார். அடுத்து டக்கெட் – போப் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 52 ரன் சேர்த்தது. போப் 29 ரன்னில் வெளியேறினார். ஜோ ரூட் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, சிறப்பாக விளையாடிய டக்கெட் சதம் விளாசினார். ஜோ ரூட் 34, டக்கெட் 114 ரன் (129 பந்து, 16 பவுண்டரி), ஹாரி புரூக் 9 ரன் எடுத்து சஜித் கான் சுழலில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, இங்கிலாந்து திடீர் சரிவை சந்தித்தது.
கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 1 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். 2ம் நாள் முடிவில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 239 ரன் எடுத்துள்ளது. ஜேமி ஸ்மித் 12, பிரைடன் கார்ஸ் 2 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து 14 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் பந்துவீச்சில் சஜித் கான் 4 விக்கெட், நோமன் அலி 2 விக்கெட் வீழ்த்தினர். கை வசம் 4 விக்கெட் இருக்க, இங்கிலாந்து இன்னும் 127 ரன் பின்தங்கியுள்ள நிலையில் இன்று 3ம் நாள் சவாலை சந்திக்கிறது.
The post இங்கிலாந்து 239/6 சதம் விளாசினார் டக்கெட் appeared first on Dinakaran.