பெர்த்,
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் முதலாவாது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 150 ரன்களும், ஆஸ்திரேலியா 104 ரன்களும் அடித்தன.
இதனையடுத்து 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 487 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 161 ரன்களும், விராட் கோலி 100 ரன்களும் அடித்தனர். இதன் மூலம் ஆஸ்திரேலியா வெற்றி பெற 534 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா 3-வது நாள் முடிவில் 12 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
முன்னதாக இந்த போட்டியில் விராட் கோலி அடித்த சதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 30-வது சதமாக பதிவானது. மேலும் 3 வடிவிலான போட்டிகளையும் சேர்த்து ஆஸ்திரேலிய மண்ணில் அவரது 10-வது சதம் இதுவாகும்.
இதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சதங்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார்.