மெல்போர்ன்: இந்தாண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிசில் நேற்று, ரஷ்ய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா, பெலாரஸ் வீராங்கனை அரைனா சபலென்கா அற்புதமாக ஆடி வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினர். இந்தியாவின் சுமித் நாகல் தோல்வியை தழுவினார். டென்னிஸ் உலகின் கவுரவம் மிக்க போட்டிகளில் ஒன்றான ஆஸி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நேற்று துவங்கின. மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த ஒரு போட்டியில் செக் வீராங்கனை மேரி பவுஸ்கோவாவுடன், ரஷ்யாவை சேர்ந்த முன்னணி வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா மோதினார். இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய ஆண்ட்ரீவா, 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் உலகின் முதல் நிலை வீராங்கனையான பெலாரஸ் நாட்டின் அரைனா சபலென்காவுடன் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன் மோதினார். இந்த போட்டியில் சபலென்கா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த ஒரு போட்டியில் செக் வீரர் தோமஸ் மெகாக் – இந்திய வீரர் சுமித் நாகல் மோதினர். முதல் 2 செட்களை, 6-3, 6-1 என்ற கணக்கில் எளிதில் இழந்த நாகல், 3வது செட்டில் கடுமையாக போராடினார். இருப்பினும், அந்த செட்டையும், 7-5 என்ற கணக்கில் இழந்ததால் தோல்வியை தழுவினார். மகளிர் ஒற்றையர் பிரிவில் நடந்த மற்ற போட்டிகளில், கனடாவின் லேலா பெர்னாண்டஸ், ஜெர்மனியின் டாட்ஜனா மரியா, ஸ்பெயின் வீராங்கனை பாலா படோஸா, குரோஷியாவின் டோனா வெகிக், சீனாவின் குயின்வென் ஸெங் ஆகியோர் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த போட்டிகளில், செக் வீரர் ஜிரி லெஹெக்கா, பிரான்ஸ் வீரர் ஆர்தர் பில்ஸ், நார்வே வீரர் கேஸ்பர் ரூட், ஜப்பான் வீரர் கேய் நிஷிகோரி, பிரான்ஸ் வீரர்கள் ஹியுகோ கேஸ்டன், யுகோ ஹம்பர்ட் உள்ளிட்டோர் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினர்.
The post ஆஸி ஓபன் டென்னிஸ் முதல் நாளில் வெற்றிக் கொடி நாட்டிய ஆண்ட்ரீவா, சபலென்கா: இந்தியாவின் சுமித் நாகல் ஏமாற்றம் appeared first on Dinakaran.