ஆழமான நீர் நிலைகளில் குழந்தைகள் நீச்சல் பழகுவதை தவிர்க்க வேண்டும்; கழுத்தளவு தண்ணீரே போதுமானது: அரசு பயிற்சியாளர் அறிவுறுத்தல்

2 weeks ago 3

சேலம்: ஆழமான நீர்நிலைகளில் குழந்தைகள் நீச்சல் பழகுவதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும் என்று அரசு நீச்சல் பயிற்சியாளர் அறிவுரை வழங்கி உள்ளார். தமிழகத்தில் பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நிறைவடைந்துள்ளது. அதேபோல், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. கடும் வெயில் காரணமாக 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்தவும் பள்ளிக்கல்வித்துறை முனைப்பு காட்டி வருகிறது.

கோடைக்காலத்தில் வெயில் தாக்கத்தை தணிக்க பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கிணறு, ஏரி, குளம், குட்டை, ஆறு உள்ளிட நீர்நிலைகளுக்கு சென்று குளித்து வருகின்றனர். குறிப்பாக கோடைகாலங்களில் பள்ளி சிறுவர், சிறுமிகள் கிராமங்களில் உள்ள குளம், குட்டைகளுக்கு நண்பர்களுடன் சென்று மீன் பிடிப்பது, குளிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்று, தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் ஒவ்வொரு வருடமும் நடந்து வருகிறது. இதனால் விலைமதிப்பில்லாத சிறார்கள் உயிரிழந்து வருவது கவலையளிப்பதாக இருந்து வருகிறது.

இதுகுறித்து சேலம் காந்தி ஸ்டேடியத்தில் உள்ள அரசு நீச்சல் குளத்தின் பயிற்சியாளர் மகேந்திரன் கூறியதாவது: தற்போது பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் கிராமப்புறத்தில் உள்ள குழந்தைகள் கிணறு, ஏரி, குளம் குட்டைகளில் குளித்து வருகின்றனர். எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்று குளிக்கும் போது, தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவம் நடக்கிறது. குழந்தைகள் ஆழமாக இடத்தில் குளிப்பதை பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது. கோடைகாலம் ெதாடங்குவதால் குழந்தைகளை பெற்றோர்கள் தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். நீச்சல் பயிற்சியை கற்றுக்கொள்ள கழுத்தளவு தண்ணீர் இருந்தாலே போதுமானது. அதிலேயே நீச்சல் பயிற்சியை கற்றுக்கொள்ள முடியும். அதிக ஆழம் உள்ள நீர்நிலைகளில் நீச்சல் பழகுவதை பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது.

உயரம், நீளம் தாண்டுதல், கபடி, கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் உள்ளது. இந்த விளையாட்டுகளில் ஈடுபடும் போது, உடலில் உள்ள குறிப்பிட்ட தசைகள் மட்டும் இயங்கும். ஆனால், நீச்சலை பொறுத்தவரை, உடலில் உள்ள அனைத்து தசைகளும் இயங்கி வருகிறது. நீச்சல் அடிப்பதால் இருதயம், நுரையீரல் சுவாச செயல்பாடுகள் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. தண்ணீருடன் மகிழ்ந்து விளையாடவும் பயிற்சி பெற முடியும். நீச்சலில் பிரிஸ்டைல், பேக்ஸ்ட்ரோக், பிரெஸ்ட் ஸ்ட்ரோக், பட்டர்பிளை உள்ளிட்ட பிரிவுகள் உள்ளது. நீச்சலில் சிறப்பாக உள்ளவர்கள் மாவட்ட, மாநில, தேசிய, காமன்வெல்த், ஆசிய போட்டிகளில் பங்கேற்று விளையாடவும் முடியும்.

மாணவர்கள் நீச்சல் பயிற்சியில் சிறப்பாக இருந்தால் அவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும். அவர்களை தொடர்ச்சியாக உற்சாகப்படுத்தி சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும். தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். சேலம் காந்தி ஸ்டேடியத்தில் உள்ள நீச்சல் குளத்தில் வருடம் முழுவதும் நீச்சல் பயிற்சி அளித்து வருகிறோம். ேமலும், கோடைகாலத்தில் சிறப்பு நீச்சல் பயிற்சி முகாம்களையும் நடத்தி வருகிறோம். இதில் ஏராளமானோர் சேர்ந்து பயிற்சி பெற்று வருகின்றனர். 7வயதிற்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியர், பெரியவர்கள் நீச்சல் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். நீச்சல் பயிற்சிக்கு வரும் போது சாப்பிடாமல் பயிற்சி செய்வது அவசியம். நீச்சலுக்கு தேவையான உடற்பயிற்சிகள் அளிக்கப்படும். அதனைத்தொடர்ந்து நீச்சல் பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஆழமான நீர் நிலைகளில் குழந்தைகள் நீச்சல் பழகுவதை தவிர்க்க வேண்டும்; கழுத்தளவு தண்ணீரே போதுமானது: அரசு பயிற்சியாளர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article