சென்னை: தமிழக சட்டப்பேரவை ஜனவரி 6ம் தேதி கூடுகிறது என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் அன்றைய தினம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார். தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்திய அரசியலமைப்பு சட்டம் 174/1 கீழ் தமிழக சட்டமன்ற கூட்டத்தை தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் வருகிற ஜனவரி 6ம் தேதி கூட்டி உள்ளார். அன்று காலை 9.30 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த உள்ளார். இந்த சட்டமன்ற கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்று அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு செய்யும். ஒன்றிய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது தொடர்பான தீர்மானத்தை முதல்வர் கொண்டு வந்தால், அந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தி நிறைவேற்றுவதற்கு சட்டமன்றம் தயாராக இருக்கிறது.
கடந்த ஆண்டு நடந்த கூட்டத்தில் தமிழ்நாடு ஆளுநர், தனது உரையின் முதல் பக்கத்தையும், கடைசி பக்கத்தையும் வாசித்தார். இந்த முறை, முழுமையாக வாசிப்பார் என்று நம்புகிறோம். 2011ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை குளிர்கால கூட்டத்தொடர் இரண்டு நாட்கள் தான் நடத்தப்பட்டது. அதற்கு காரணம் என்னவென்றால், ஒரு கூடுதல் செலவினத்துக்கான ஒரு மசோதாவை நிதி அமைச்சர் அறிமுகம் செய்தார். அதில் பேசுவதற்கு பெரிய பொருள் இருக்காது. இதற்குமுன் எடுத்துக்கொண்டால், தமிழ்நாடு மின்வாரியமும் இந்த குளிர்கால கூட்டத்தொடரில் எடுத்துக் கொள்ளப்படும். பொது பட்ஜெட்டில் தமிழ்நாடு மின்வாரியம் மீது விவாதம் வராது. அதனால், ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை அந்த கூட்டம் நடைபெறும். இப்போது, கூடுதல் செலவினங்களுக்குள் ஒரு சின்ன மசோதா மட்டும்தான் வரும். அதை, 2011 முதல் 2021 வரை 2 நாட்கள், அதுவும் விவாதம் இல்லாமல் நடந்திருக்கும்.
தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், எதுவாக இருந்தாலும் கூடுதல் நேரம் ஆனாலும் பரவாயில்லை, விவாதத்துக்கு அனுமதி கொடுங்கள் என்று சொல்லி உள்ளார். இதுபோக, இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதால், பெரிய அளவில் நாட்களை எடுக்க முடியவில்லை. காரணம், தேர்தல் அறிவித்த பிறகு சட்டமன்ற கூட்டத்தை நடத்த முடியாது. தேர்தல் முடிந்த பிறகுதான் கூட்ட முடியும். 2021ல் சட்டமன்ற தேர்தல் முடிந்து, குறைந்த நாட்கள்தான் இருந்தது. அதனால் அதிக நாட்கள் எடுக்க முடியவில்லை. வெள்ளம், மிகப்பெரிய பாதிப்புகள் வரும்போது அரசு, அரசு இயந்திரம், அமைச்சர்கள் எல்லாருமே நேரடியாக களத்துக்கு போக வேண்டியுள்ளது.
அதனால் நேரம் எடுக்க முடியவில்லை. கடந்த ஆண்டு டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி வரை மழை பாதிப்பு இருந்தது. அதிகளவு பாதிப்பு தென்மாவட்டங்களில் இருந்தது. இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்ப சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும். இந்த அரசின் எண்ணம், ஆண்டுக்கு 100 நாட்கள் நடத்த வேண்டும் என்பதுதான். இருந்தாலும், தேவைப்படும் நாட்களை பயன்படுத்தி தமிழ்நாடு அரசு, தமிழக மக்களுக்கு என்னென்ன செய்ய முடியுமோ அதை அனைத்தையும் சட்டமன்ற கூட்டத்தொடர் குறைந்த நாட்கள் நடந்தாலும், அதில் நிறைவேற்றி செய்து கொண்டிருக்கிறார்கள்.
அதனால் சட்டமன்ற கூட்டத்தொடர் 10 நாட்கள் குறைவாக நடந்ததினால் மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளில் எந்த குறைவும் இல்லை. கடந்த கூட்டத்தொடரில் கூட டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பான விவாதம் நடந்தது. அதில் என்ன நடந்தது, எதிர்க்கட்சி தலைவர் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது. அவர் பேசி முடித்த பிறகுதான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த விவாதம், டங்ஸ்டன் மட்டுமல்லாமல், எங்கெல்லாம் போனது என்பதை பார்த்திருப்பீர்கள். செம்பரம்பாக்கம் போய், அப்படி ஒவ்வொரு இடமாக இடம்மாறி போனது.
இருந்தாலும்கூட, பிரதான எதிர்க்கட்சி தலைவர் பேச உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று முதல்வர் விரும்பினார். எதிர்க்கட்சி தலைவருக்கு உரிய மரியாதை, அஸ்தஸ்து அனைத்தையும் கொடுக்கிறோம். ஜீரோ ஹவரில் பேச முன்கூட்டியே பேச அனுமதி கேட்க வேண்டும். அரைமணி நேரத்துக்கு முன்கூட அனுமதி கேட்டிருக்க வேண்டும். ஆனாலும், என்னிடம் முன்கூட்டியே அனுமதி கேட்காத எதிர்க்கட்சி தலைவருக்கு பேச அனுமதி கொடுக்கப்பட்டது. சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பார்ப்பது இல்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கே அதிக நேரம் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
* கடந்த கூட்டத்தொடரில் டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அவர் பேசி முடித்த பிறகுதான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* எதிர்க்கட்சி தலைவருக்கு உரிய மரியாதை, அஸ்தஸ்து அனைத்தையும் கொடுக்கிறோம். ஜீரோ ஹவரில் பேச முன்கூட்டியே பேச அனுமதி கேட்க வேண்டும். ஆனாலும், அனுமதி கேட்காத எதிர்க்கட்சி தலைவருக்கு பேச அனுமதி கொடுக்கப்பட்டது.
The post ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார் ஜன.6ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது: ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பு appeared first on Dinakaran.