ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் உட்பட 55 பேர் வேட்பு மனு ஏற்பு: பிரசாரம் தொடக்கம்

4 hours ago 2

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனு பரிசீலனை முடிந்ததையடுத்து, திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் உட்பட 55 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வேட்பாளர்கள் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 10ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவடைந்தது. நிறைவு நாளான நேற்று முன்தினம் வரை இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் பதிவு பெற்ற அரசியல் கட்சிகளை சார்ந்த அகில இந்திய எம்ஜிஆர் ஜனநாயக கட்சி சார்பில் சேலம் ஆத்தூர் முல்லைவாடி ராஜமாணிக்கம், இந்திய கன சங்கம் சார்பில் ஈரோட்டை சேர்ந்த தர்மலிங்கம், சென்னை கொளத்தூரை சேர்ந்த அகில இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் ரவி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 58 பேர் 65 வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், ஈரோடு மாநகராட்சி கூட்டரங்கில் நேற்று காலை 11 மணிக்கு வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. இதில், வேட்புமனு தாக்கல் செய்த 58 வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.  தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான மனிஷ் தலைமையிலும், தேர்தல் பொது பார்வையாளர் அஜய்குமார் குப்தா முன்னிலையிலும் வேட்பு மனுபரிசீலனை நடந்தது. ஒவ்வொரு வேட்பாளரின் பெயரும் வரிசையாக படிக்கப்பட்டு வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது என அறிவிக்கப்பட்டது. வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு, என்ன காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டது என்பதும் விளக்கி கூறப்பட்டது. வேட்புமனு ஏற்கப்பட்டவர்களுக்கு அதற்கான ரசீது வழங்கப்பட்டது.

இதில், திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதா லட்சுமி ஆகியோர் உட்பட 55 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 3 வேட்பாளர்கள் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இறுதியில் 55 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ் தெரிவித்தார். வேட்பு மனு பரிசீலனையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வேட்புமனு பரிசீலனை முடிந்ததையடுத்து வேட்பாளர்கள் தங்கள் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை ஆதரித்து வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, பெரியசேமூர் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் வேட்பாளருடன் நேற்று வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

வேட்புமனு வாபஸ் பெற நாளை கடைசி நாள்; இடைத்தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனுக்களை வாபஸ் பெற நாளை கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலை 3 மணிக்கு பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல், சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும். ஒரே சின்னத்தை பல வேட்பாளர்கள் கேட்டால், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி, முதலில் தாக்கல் செய்யப்பட்ட மனு, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. அதைத்தொடா்ந்து, இறுதி வேட்பாளர் பட்டியல் சின்னங்களுடன் வெளியிடப்படும். தொடர்ந்து, பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும், பிப்ரவரி 8ம் தேதி வாக்கு எண்ணிக்கையானது சித்தோடு ஐஆர்டிடி கல்லூரியில் நடத்தப்பட்டு, அன்றைய தினமே வெற்றி பெற்ற வேட்பாளர் விவரம் வெளியிடப்படும்.

நாதகவுக்கு என்ன சின்னம்? தேர்தல் நடத்தும் அலுவலர் விளக்கம்;
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான மனிஷ் அளித்த பேட்டி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனு பரிசீலனையில், மொத்தம் 58 வேட்பாளர்கள் அளித்த 65 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. இதில், திமுக மற்றும் நாதக வேட்பாளர்களின் மாற்று வேட்பாளர்கள் மற்றும் ஒரு சுயேச்சை வேட்பாளர் அபிடவிட் வழங்காததால் தள்ளுபடியானது. நாம் தமிழர் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் தங்களுக்கு ‘மைக்’ சின்னம் ஒதுக்கீடு செய்யும்படி கேட்டுள்ளனர்.

இதுவரை தேர்தல் ஆணையம் சார்பில் எங்களுக்கு எந்த அறிவுரையும் வழங்கப்படவில்லை. தேர்தல் ஆணையத்துக்கு நாங்கள் இதுபற்றி கடிதம் அனுப்பி உள்ளோம். 20ம் தேதி என்ன சின்னம், எவ்வாறு ஒதுக்க வேண்டும் என தெரிவிப்பார்கள். கரும்பு விவசாயி, மைக் சின்னம் போன்றவை கேட்டுள்ளனர். கரும்பு விவசாயி, வேறு ஒரு கட்சிக்கான சின்னம் என தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. எனவே, தேர்தல் ஆணைய ஆலோசனைப்படி அவர்களுக்கு முறைப்படி சின்னம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுக நிர்வாகி சுயேச்சையாக போட்டி;
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என அக்கட்சியின் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதனால் திமுக, நாதக ஆகிய இரு கட்சிகளின் வேட்பாளர்கள் நேரடியாக களம் காணுகின்றனர். இந்நிலையில், ஈரோடு அக்ரஹார வீதியை சேர்ந்த அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் செந்தில் முருகன் என்பவர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அந்த வேட்புமனுவும் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த பரிசீலனையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் அணியில் இருந்து இபிஎஸ் அணிக்கு வந்தவர் செந்தில்முருகன், கடந்த 2023ல் நடந்த இடைத்தேர்தலின்போது அதிமுக ஓபிஎஸ் அணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால், அப்போது இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையால் செந்தில்முருகன் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். அடுத்த சில தினங்களில் செந்தில் முருகன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். தற்போது அதிமுகவில் எம்ஜிஆர் இளைஞரணியின் மாநகர துணை செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். அதிமுக இடைத்தேர்தலில் போட்டியில்லை என அறிவித்தும், செந்தில் முருகன் கட்சியின் அறிவிப்ைப மீறி சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

இதுதொடர்பாக நேற்று செந்தில்முருகன் மாநகராட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘தொகுதி பிரச்னைகள் அனைத்தும் எனக்கு தெரியும். சுயேச்சையாக போட்டியிடுவதற்கு அதிமுக என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தாலும் எனக்கு பிரச்னையில்லை’ என்றார். இதுகுறித்து அதிமுக ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் ராமலிங்கம் கூறுகையில், ‘செந்தில்முருகன் அதிமுகவில் இருப்பது உண்மை தான். ஆனால், பொறுப்பில் இருப்பதாக எனக்கு நினைவு இல்லை. இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதியானால் அவர் மீது நிச்சயம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

The post ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் உட்பட 55 பேர் வேட்பு மனு ஏற்பு: பிரசாரம் தொடக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article