எந்த ஒரு செயலானாலும் அதில் உங்களை வெற்றி அடையத் தூண்டுவதும், ஊக்குவிப்பதும் உங்களுடைய ஆர்வம்தான். அது ஒரு மனநிலை. அது எளிதில் பிறருக்கும் பரவக்கூடியது. ஆர்வம் உடையவர்கள் தங்களை மட்டுமில்லாமல், அவர்களைச் சுற்றி இருப்பவர்களையும் ஆர்வம் உடையவர்களாக மாற்றி விடுகிறார்கள்.
மோட்டாருக்கு எரிபொருள் மாதிரிதான் மனிதனுக்கு ஆர்வம். ஆர்வம் இல்லாத எந்தப் பணியும் உங்களது வாழ்வில் வெற்றியைத் தராது. ஆர்வத்தை எப்படி வளர்த்துக் கொள்வது? நீங்கள் விரும்பிய ஒன்றை செய்கிறபோது ஆர்வம் தானாக வளரும். உங்கள் நோக்கம் தெளிவாய் இருந்தால் அதில் ஆர்வம் காட்டுவதும் எளிதாக இருக்கும்.
உங்கள் வேலையில் ஆர்வத்தைக் கலந்து கொள்ளுங்கள்,அப்போதுதான் உங்கள் வேலை எளிதாக அமையும். உங்கள் மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லை என்றால்,உங்களிடம் கண்டிப்பாக ஆர்வம் இருக்கப்போவதில்லை. ஆர்வமுடையவர்களின் மனதில்தான் நம்பிக்கையும் குடியிருக்கும். இந்த உலகில் ஆர்வம் இல்லாமல் எந்த மகத்தான சாதனையும் நிகழ்வதில்லை என்பதை இன்றைய இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அப்படி தனக்கு கிடைத்த பணியில் இளம் வயதிலேயே ஆர்வத்துடன் செயல்பட்டு சாதித்துக்கொண்டிருக்கும் சாதனை மங்கைதான் ஐஸ்வர்யா தொங்ரே.
ஐஸ்வர்யா கேரளா மாநிலம் திருச்சூரில் காவல்துறை கண்காணிப்பாளராக எப்போதும் மிகவும் பரபரப்பாக, சுறுசுறுப்பாக சுழன்று பணியாற்றிக் கொண்டு இருக்கிறார். ஐஸ்வர்யா முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டார்.அகில இந்திய அளவில் 196வது ரேங்க் எடுத்தார். கேரளா கேடரில் இந்திய காவல் பணியில் ஐபிஎஸ் ஆக பணியில் சேர்ந்தார்.
ஐஸ்வர்யா மும்பையில் பிறந்து வளர்ந்தவர்.செயிண்ட் சேவியர் கல்லூரியில் பொருளாதாரம், அரசியல் அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளிலும் பட்டப்படிப்பு முடித்தவர். ஓராண்டு இடைவெளி எடுத்துக்கொண்டு யுபிஎஸ்சி தேர்வுகளுக்குத் தயார்படுத்திக்கொண்டார். 22 வயதிலேயே யுபிஎஸ்சி தேர்வு எழுதி வெற்றிபெற்று பணியில் சேர்ந்தார்.
பணியில் சேர்ந்த குறுகிய காலத்திலேயே பல்வேறு முக்கியப் பொறுப்புகளை சிறப்பாகச் செய்துமுடித்தார். திருவனந்தபுரத்தில் மூளைச்சாவு அடைந்த நோயாளி ஒருவரின் இதயம் இவரது மேற்பார்வையில் வெறும் 35 நிமிடங்களில் கொச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது. இவரது சிறப்பான பணியை மாநிலமே பாராட்டியது.
27 வயதிலேயே ஐஸ்வர்யா பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளையும்,சைபர் குற்றச்செயல்களைக் கையாள்வது சார்ந்த உயர் தலைமை பொறுப்புகளில் திறம்படப் பணியாற்றி உள்ளார். இதுதவிர சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்டவற்றிலும் சிறப்பான பணியை வெளிப்படுத்தி உள்ளார்.
மாற்றத்தை நாம் கண்ணெதிரே பார்க்க நினைத்தோமானால் அத்தகைய மாற்றமாகவே நாம் மாறிவிடவேண்டும்.இதைச் சாத்தியப்படுத்தும் வகையில் நான் பணியாற்ற விரும்பினேன். அடிப்படை விஷயங்களுடன் இணக்கமாக செயல்படும்போதும், அன்றாட நிர்வாகம்,வளர்ச்சி, பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள், மக்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வுகள் கண்டறிவது என எந்தத் துறையாக இருந்தாலும் அதில் திறம்பட செயல்பட முடியும், என்கிறார் ஐஸ்வர்யா.
திருவனந்தபுரத்தில் சங்குமுகம் பகுதியில் காவல் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டார். சில மாதங்களிலேயே கொரோனா பெருந்தொற்று பரவியது. திடீரென்று ஆழமான கடலில் தள்ளிவிட்டது போல் இருந்ததாகவும், அதேசமயம், கோவிட் பெருந்தொற்று இருந்த பலருக்கும் உதவி செய்ய முடிந்தது ஆறுதலாக இருந்தது என்கிறார் ஐஸ்வர்யா.மேலும் விமான நிலையம் இவரது கட்டுப்பாட்டு எல்லைக்குள் இருந்தது. எனவே, வெவ்வேறு நாடுகளிலிருந்து மக்களை இந்தியா அழைத்து வந்த வந்தே பாரத் விமான ஏற்பாடுகளை இரவு பகலாக மேற்பார்வையிட்டு சிறப்பாகப் பணியாற்றினார்.
கோவிட் காலகட்டத்தில் அசாதாரண சூழலை எப்படியோ சமாளித்தேன். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆத்திரப்பட்டனர். இருந்தபோதும் அவர்களுடன் நான் ஏற்கெனவே தொடர்புகொண்டிருந்த அனுபவம் இருந்ததால் அவர்களுடன் இந்தியில் பேசி அவர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு பிரச்னைகளை சரிசெய்தேன், என்கிறார் ஐஸ்வர்யா.
சங்குமுகம் பகுதியில் போஸ்டிங் முடிவடைந்த தருவாயில், இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக திருவனந்தபுரத்திலிருந்து கொச்சிக்கு இதயத்தை விமானத்தில் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தார். இதுபற்றி அவர் விவரிக்கும்போது,நான் அப்போது காவல் உதவி ஆணையராக இருந்தேன்.ஏர்போர்ட் என் கட்டுப்பாட்டின்கீழ் இருந்தது. மருத்துவமனையிலிருந்து ஏர்போர்ட் வரை ஆம்புலன்ஸ் செல்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. மருத்துவக் குழுவுடன் இணைந்து பணியாற்ற வேண்டியிருந்தது. கேரள காவல்துறை ஹெலிகாப்டரில் 35 நிமிடங்களில் இதயத்தை கொண்டு சேர்த்தோம். கடமையைச் செய்யவேண்டும் என்பதில் ஆர்வத்துடன், முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டதால், யாருடைய இதயம் என்பது போன்ற மற்ற விவரங்கள் எதையும் நான் தெரிந்துகொள்ளவில்லை என்கிறார் ஐஸ்வர்யா.
பாலினம் சார்ந்த புரிதலை மக்களிடையே ஏற்படுத்தவேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தி மக்களுக்குப் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார். இப்போது திருநங்கைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்களும் நடந்துவருகின்றன. எனவே, பாலினம் சார்ந்த விஷயங்களைத் திறந்த மனதுடன் புரிந்துகொள்ளவேண்டியது அவசியமாகிறது என்பதை வலியுறுத்தி வருகிறார் ஐஸ்வர்யா. கல்வித் துறையுடன் காவல்துறை இணைந்து பல்வேறு விழிப்புணர்வு முகாம்களையும் ஆலோசனைகளையும் பள்ளிகளில் வழங்கி பிரச்னைகளுக்குத் தீர்வு ஏற்படுத்தி வருகிறார் ஐஸ்வர்யா.
சைபர் குற்றங்களை சமாளிக்க பள்ளிகளில் சைபர் செக்யூரிட்டி கிளப்கள் அமைத்து,இதில் மாணவர் பிரதிநிதி,சைபர் செல்லுடன் அமர்வுகளில் பங்கேற்பார்.கொச்சியில் ஐஸ்வர்யா ஒரு சைபர் சிமுலேஷன் ரூம் உருவாக்கியிருக்கிறார்.சைபர் குற்றங்கள் தொடர்பான அனைத்து அம்சங்களையும் இதன் மூலம் அனிமேடட் வீடியோ கேம் வடிவில் புரிந்துகொள்ளும் விதத்தில் புதுமைகளை ஏற்படுத்தி இருக்கிறார் ஐஸ்வர்யா.
எந்த ஒரு பிரச்னைக்கும் ஒரு சமமான கண்ணோட்டம் அவசியம். கேரள காவல்துறையின் ஜனமைத்ரி திட்டத்தின் ஒரு பகுதியாக நான் பல்வேறு பழங்குடியினப் பகுதிகளை பார்வையிட்டேன்.அப்போது காவல்துறை பெண் அதிகாரியான என்னை பார்த்ததும் அவர்கள் பேசுவதற்கு தயக்கம் காட்டுவதில்லை. தங்கள் அனுபவங்களைத் தயக்கமின்றி பகிர்ந்துகொள்கிறார்கள்.பரிவு,இரக்கம் போன்ற குணாதிசயங்களை பெண்ணுடன் பொருத்திப் பார்க்கிறார்கள். எனவே, இன்றைய காலகட்டத்தில் பெண்கள் காவல்துறையில் பணியாற்ற முன்வர வேண்டும். அது மட்டுமல்ல மக்கள் பணியாற்றி பெண்கள் சாதிக்க வேண்டும் என்கிறார் ஐஸ்வர்யா.இளம் வயதிலேயே ஐபிஎஸ் அதிகாரியாக உருவாகி தனக்குக் கிடைத்த ஒவ்வொரு பணியிலும் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு பாராட்டை பெற்று சாதித்துக் கொண்டிருக்கும் சாதனைப் பெண்மணி ஐஸ்வர்யாவின் வாழ்க்கை இன்றைய இளைஞர்களுக்கு ஊக்கப்படுத்தும் தன்னம்பிக்கைப் பாடமாகும்.
The post ஆர்வம் இல்லாமல் எந்த மகத்தான சாதனையும் நிகழ்வதில்லை appeared first on Dinakaran.