சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வைஷ்ணவா கல்லூரியில், இந்தஸ் நாகரிகம் சார்ந்த பண்பாடு, மக்கள் மற்றும் தொல்பொருளியல் மீதான பார்வைகள் என்ற தலைப்பில் தேசிய மாநாட்டின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: உலகில் 3 இனங்களாக பாகுபாடுகள் உள்ளன. முதல் வெள்ளை நிறம். 2வது மஞ்சள், 3வது கருப்பரினம். இதில் மிகவும் உயர்ந்தவர்களாக வெள்ளை இனத்தவரை கருதுகிறார்கள்.
1850களில் நிறத்தின் அடிப்படையிலான பாகுபாடு இருந்தது. வின்ஸ்டன் சர்ச்சில் மற்ற இனத்தினரை நாய்கள் போல் கருதினார். ஆரியர் என்று இனப் பாகுபாடு காட்டியவர் மேக்ஸ் மில்லர். ஆரியர் என்ற ஒன்று இல்லை என தமிழ் சங்க கால நூல்கள் சொல்கின்றன. ஆரியர்களைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல், தமிழகத்தில் சில நூல்களை எழுதுகிறார்கள். அவர்கள் வந்தேறிகள் என்று நச்சு விதையை பரப்புகிறார்கள். இந்தியாவில் மேற்கத்திய நாகரிகங்களை திணிக்க முயற்சித்தனர். தமிழும், சமஸ்கிருதமும் இந்தியாவில் மிகவும் பழமையான சிறந்த மொழிகள்.
ஐரோப்பியர்கள் இந்தியா வருகை தந்த போது, சிறந்த நாகரிகங்கள் இருந்தன. மகாபாரதத்தில் சரஸ்வதி நதி குறித்து பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ரிக் வேதத்தில் அனைவரும் சமம் என்று அனைவரும் ஒரே குடும்பம் என்று இருக்கிறது. ஆரியர்களை வந்தேறிகள் என்று சொன்னவர் ஈவேரா ராமசாமி, அதை இங்கே திணிக்க முயற்சி செய்தார். மொழிவாரியாக நாம் பிரிக்கப்பட்டுள்ளோம்.
இது ஒற்றுமைக்கு எதிராக உள்ளது. இடதுசாரிகள் இதை ஏற்றுக் கொள்வதில்லை, காரல் மார்க்ஸ் சொல்வதைத்தான் அவர்கள் கேட்கிறார்கள். ஆரியர்கள் என்பவர்கள் ஆசிரியர்களை போன்றவர்கள். கற்பிப்பவர்கள் தலைசிறந்தவர்கள். வேதத்தில் அனைவரும் சமம் என்று இருக்கிறது. பாரதம் தற்போது எதை சொன்னாலும் உலகமே திரும்பிப் பார்க்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
The post ஆரியர்கள் தலைசிறந்தவர்கள் மொழிவாரியாக பிரித்தது ஒற்றுமைக்கு எதிரானது: ஆர்.என்.ரவி பேச்சால் பரபரப்பு appeared first on Dinakaran.