ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை கடும் உயர்வு மல்லி, முல்லை கிலோ ₹490 வரை விற்பனை வேலூர் நேதாஜி மார்க்கெட்டில்

1 month ago 7

வேலூர், அக்.10: ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வேலூர் நேதாஜி பூ மார்க்கெட்டுக்கு உள்ளூர் மட்டுமின்றி, கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதிகளில் இருந்து ரோஜா, சாதிமல்லி, சம்பங்கி பூக்கள் வருகின்றன. சாமந்தி, மல்லி, முல்லை, காக்கட்டான், கேந்தி போன்ற பூக்கள் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் இருந்து வருகின்றன. சாதாரண நாட்களில் பூக்களின் விலை கடுமையாக சரிவு காணும். அதேபோல் தேவைக்கேற்ப விளைச்சல் இல்லாத சமயங்களிலும் பூக்களின் விலையில் மாற்றம் ஏற்படும். அத்துடன் பண்டிகை மற்றும் விசேஷ தினங்களில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்படும்.

நாளை ஆயுத பூஜையும், அதற்கு மறுநாள் விஜயதசமி பண்டிகை காலங்கள் வருவதால் வீடுகள், கோயில்கள் மட்டுமின்றி, தொழில் நிறுவனங்கள், கடைகள், ஓட்டல்கள் என அனைத்து இடங்களிலும் பூக்களின் தேவை இருக்கும். இந்த தேவையின் அதிகரிப்புக்கு ஏற்ப பூக்களின் வரத்து இருக்காது என்பதால் நேற்றே வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. மொத்த விற்பனையாளர்களிடம் சாமந்தி விலை கிலோ ₹200 ஆகவும், சில்லரையில் ₹280 ஆகவும் விற்பனையானது. மல்லி, முல்லை பூக்கள் மொத்த விற்பனையாளர்களிடம் கிலோ ₹400 ஆகவும், சில்லரையில் ₹490 ஆகவும் விற்பனையானது. ரோஜா சிறியது மொத்த விற்பனையாளர்களிடம் கிலோ ₹300 ஆகவும், சில்லரையில் ₹350 ஆகவும், காக்கட்டான், சாதி மல்லி பூக்கள் மொத்த விற்பனையாளர்களிடம் கிலோ ₹300 ஆகவும், சில்லரையில் ₹350 ஆகவும், சம்பங்கி கிலோ ₹200 ஆகவும், கனகாம்பரம் கிலோ ₹500 ஆகவும், கேந்தி கிலோ ₹50 ஆகவும் விற்பனையானது.

The post ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை கடும் உயர்வு மல்லி, முல்லை கிலோ ₹490 வரை விற்பனை வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் appeared first on Dinakaran.

Read Entire Article