திருவொற்றியூர்: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ெதாடர்பாக கைதான புதூர் அப்பு கொடுத்த தகவலின்படி, மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். எண்ணூர் காசி கோவில்குப்பம் 2வது தெருவை சேர்ந்தவர் ராகவன் (எ) வீரராகவன் (26), பிரபல ரவுடி. இவர் மீது காசிமேடு காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிறுவையில் உள்ளன. சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக ஜாமீனில் வந்த வீரராகவன் கடந்த வாரம் மீண்டும் அதை புதுப்பிக்க வழக்கறிஞர் தினேஷுடன் நீதிமன்றத்திற்கு சென்றார். ஆனால், நீதிபதி அவருக்கு ஜாமீன் மறுத்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
அப்போது ரவுடி வீரராகவன் தனது நண்பரும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள அப்பு (எ) புதூர் அப்பு கொடுத்த 7.6 எம்.எம். கைத்துப்பாக்கி, 4 தோட்டாக்களை வழக்கறிஞரிடம் கொடுத்துவிட்டு சிறைக்கு சென்று விட்டார். இதுதொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வக்கீலாக உள்ள சாலிகிராமத்தை சேர்ந்த அப்புவின் வழக்கறிஞர் பழனிமுத்து (37) என்பவரிடம் துப்பாக்கி ஒப்படைக்கப்பட்டது. அதுதொடர்பாக பழனிமுத்து காசிமேடு காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு கடந்த அக்டோபர் 19ம் தேதி கைத்துப்பாக்கி, 4 தோட்டாக்களையும் இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்தார்.
இதை பெற்றுக் கொண்ட காசிமேடு போலீசார், இதுகுறித்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் உள்ள அப்புவிடம் விசாரணை நடத்தினர். பிறகு கார்த்திகேயன் (எ) வீச்சு கார்த்திக் (39) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் கொடுத்த தகவலின்படி, அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியை சேர்ந்த தமிழரசன்(30), மதுரவாயல் ஆலப்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன்(28) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இதில் தமிழரசன் வீட்டில் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கி, 4 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மணிகண்டன்தான் துப்பாக்கி கொடுத்ததாக தமிழரசன் தெரிவித்ததின்படி, மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் முக்கிய குற்றவாளியான சம்பவ செந்திலை தேடி வருகிறார்கள். தொடர்ந்து யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
The post ஆம்ஸ்ட்ராங் கொலையில் மேலும் 2 பேர் சிக்கினர்: துப்பாக்கி சப்ளை செய்தது அம்பலம் appeared first on Dinakaran.