புதுடெல்லி:‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் சவப்பெட்டியை பாகிஸ்தான் அரசு அதிகாரிகள், ராணுவ வீரர்கள் சுமந்து சென்ற வீடியோ வெளியான நிலையில், அவை சர்வதேச ஊடகங்களில் கடும் விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளது. கடந்த 7ம் தேதி நடைபெற்ற இந்திய ராணுவத்தின் துல்லிய தாக்குதல்களில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதில், தீவிரவாதிகள் யூசுப் அஸ்ஹார், அப்துல் மாலிக் ரவூப், முதாசிர் அகமது உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கொல்லப்பட்டனர். முரிட்கேயில் நடைபெற்ற இறுதிச் சடங்கில், பாகிஸ்தான் ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் பயாஸ் ஹுசைன், மேஜர் ஜெனரல் ராவ் இம்ரான், பிரிகேடியர் முகமது புர்கான், பஞ்சாப் மாகாண காவல்துறை ஆய்வாளர் ஜெனரல் உஸ்மான் அன்வர் மற்றும் மாலிக் சோஹைப் அகமது ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த இறுதிச் சடங்கானது, அமெரிக்காவால் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்ட ஹபீஸ் அப்துல் ரவூப் தலைமையில் பிரார்த்தனைகள் நடைபெற்றன. குவாரி அப்துல் மாலிக், காலித், முதாசிர் ஆகியோர் ஜமாஅத்-உத்-தவா தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்களாகவும், முரிட்கேயில் உள்ள மசூதியில் பிரார்த்தனை தலைவர்களாகவும், அந்த மசூதியின் காப்பாளர்களாகவும் பணியாற்றியவர்கள் எனக் கூறப்படுகிறது. இவர்களின் உடல்கள் பாகிஸ்தான் தேசியக் கொடியால் சுற்றப்பட்டு, பாகிஸ்தான அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது. இதுதொடர்பான வீடியோக்கள் வெளியான நிலையில், தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் அரசும், ராணுவமும் நேரடியாக செயல்படுவதை காட்டுகிறது. மேலும் பாகிஸ்தானின் தீவிரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இந்த இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் காவல்துறையினர் பங்கேற்ற புகைப்படத்தை வெளியிட்டு, இது குறித்து கடும் விமர்சனம் செய்தார். மேலும் இந்த நிகழ்வு, பாகிஸ்தான் ராணுவத்திற்கும் தீவிரவாத குழுக்களுக்கும் இடையேயான நேரடி தொடர்பை வெளிப்படுத்துவதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. இந்தியா நடத்திய பதிலடி தாக்குதல்களில், பாகிஸ்தான் மக்கள் கொல்லப்பட்டதாகக் அந்நாடு கூறி வந்தாலும் தீவிரவாதிகளின் இறுதிச் சடங்கில் ராணுவ மற்றும் அரசு அதிகாரிகளின் பங்கேற்பு, அவர்களின் தீவிரவாதத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதாக இந்தியா தெரிவித்துள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தீவிரவாதிகளின் சவப்பெட்டிகளை சுமந்து செல்வதைக் காட்டுகின்றன. இது, பாகிஸ்தானின் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் நம்பகத்தன்மையை சர்வதேச அளவில் கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. மேலும் சர்வதேச ஊடகங்களில் தீவிரவாதிகளின் சவப் பெட்டியின் முன் மரியாதை செய்த பாகிஸ்தான் அரசு அதிகாரிகள், ராணுவ வீரர்கள் குறித்தும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
The post ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் சவப்பெட்டியை சுமந்து சென்ற பாகிஸ்தான் அரசு அதிகாரிகள், ராணுவ வீரர்கள்: சர்வதேச ஊடகங்களில் கடும் விமர்சனம் appeared first on Dinakaran.