
சண்டிகார்,
பகல்காம் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதை தொடர்ந்து, இந்தியா- பாகிஸ்தான் இடையே நடைபெற்ற மோதல் 4 நாட்களில் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானா மாநிலம் ஹிசார் பகுதியை சேர்ந்த பெண் யூடியூபர் ஜோதி மல்கோத்ரா (வயது 33) உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்களில் முக்கியமானவராக கருதப்படும் ஜோதி மல்கோத்ரா டிராவல் வித் ஜோ என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்தார்.
இவரது யூடியூப் சேனலை 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர். இன்ஸ்டாகிராமிலும் ஆயிரக்கணக்கானோர் பின் தொடரும் நிலையில், அவர் அடிக்கடி பாகிஸ்தானுக்கு சென்று வந்தது தெரியவந்தது.தொடர்ந்து அவரை போலீசார் கண்காணித்து வந்த நிலையில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் அவரை கடந்த 17-ந்தேதி அரியானா போலீசார் கைது செய்தனர். அவரிடம், தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.), ராணுவ புலனாய்வு அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஜோதி மல்கோத்ரா பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள எஹ்சான் உர் ரஹீம் என்ற அதிகாரியுடன் பல உளவுத்தகவல்களை பகிர்ந்து வந்தது தெரியவந்துள்ளது.
பயண வீடியோ சம்பந்தமாக பாகிஸ்தான் சென்றதாக கூறிய ஜோதி மல்கோத்ரா அங்கு பாகிஸ்தான் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளார். குறிப்பாக அந்நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அதிகாரிகளை சந்தித்து பேசியதும் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஜோதியின் வாட்ஸ்-அப் உரையாடல்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் ஐ.எஸ்.ஐ. அமைப்பை சேர்ந்த அலிஹசன் என்பவருடன் ஜோதி பலமுறை பேசியதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய ரஹீமை ஜோதி சந்தித்தபோது அவர் ஜோதிக்கு பாகிஸ்தான் செல்ல உடனடியாக பாஸ்போர்ட் வழங்க உதவி உள்ளார்.மேலும் பாகிஸ்தானில் உங்களுக்கு எனது நண்பர் அலிஹசன் உதவுவார் என கூறி உள்ளார்.அதன்படி, பாகிஸ்தான் சென்று அலிஹசனை சந்தித்த ஜோதி அவரிடம் இந்திய ராணுவ தகவல்களை பகிர்ந்து கொண்டதும் தெரியவந்துள்ளது.
மேலும் 2023-ம் ஆண்டு மார்ச் முதல் 2025 வரை ரஹீம் என்ற டேனிஸ்வுடன் ஜோதி மல்கோத்ரா தொடர்பில் இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து ஜோதி மல்கோத்ராவிடம் இருந்து 3 செல்போன்கள் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அதில், மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.பகல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா கடந்த 7-ந்தேதி பாகிஸ்தானுக்குள் புகுந்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடத்திய அதிரடி தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.இதைத்தொடர்ந்து இந்திய நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன் தாக்குதலை நடத்தியது. மேலும் ஏவுகணைகளையும் வீசியது. ஆனால் பாகிஸ்தானின் இந்த தாக்குதலை இந்திய முப்படைகளும் அதிரடியாக முறியடித்தன. மேலும் பாகிஸ்தானில் உள்ள விமானப்படை தளங்கள் உள்ளிட்ட முக்கிய தளங்கள் மீதும் இந்தியா ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின்போது முன்னெச்–சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் இரவு நேரங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
அப்போது இந்த மாநிலங்களில் எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, எந்தெந்த பகுதிகளில் ராணுவம் முன்னேறி செல்கிறது என்பது குறித்த விவரங்களை ஜோதி மல்கோத்ரா பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு பகிர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதுகுறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஜோதியிடம் விசாரித்தபோது, அவர் அவற்றை ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து ஜோதியின் டைரியை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதிலும் ஜோதி 10 நாள் பயணமாக பாகிஸ்தான் சென்று வந்ததும் தெரியவந்தது. அதில், ஒரு பதிவில், வண்ணமயமான பாகிஸ்தான் என்றும், பாகிஸ்தானில் எனது அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.மேலும் மற்றொரு பதிவில் பாகிஸ்தான் அதிகாரி ஒருவரிடம், பாகிஸ்தானில் உள்ள கோவில்களை பாதுகாக்கவும், 1947-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிக்கப்பட்டதால் இந்தியர்களின் உறவினர்கள் பாகிஸ்தானில் பலர் உள்ளனர். அவர்களின் குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டதும் தெரியவந்துள்ளது. மேலும் ஜோதியின் வங்கி கணக்கு விபரங்களையும், பயண விபரங்களையும் போலீசார் ஆய்வு செய்ததில் ஏராளமான தகவல்கள் கிடைத்துள்ளன. இன்றுடன் ஜோதியின் போலீஸ் காவல் முடிவடையும் நிலையில், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.