டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு சென்று விளக்கம் அளிக்க ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட 7 குழுக்களில் முதல் குழு இன்று ஜப்பான் புறப்பட்டுச் சென்றது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மூலம் பாகிஸ்தானிற்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இந்த நிலையில், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு நேரில் சென்று விவரிக்க பாஜக எம்.பி.க்கள் ரவிசங்கர் பிரசாத், பைஜெயந்த் பாண்டா, காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், ஐக்கிய ஜனதாதளம் எம்.பி. சஞ்சய் ஜா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) எம்.பி. சுப்ரியா சுலே, சிவசேனா எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவர்களில் 4 பேர் தேசிய ஜனநாயக கூட்டணியையும், 3 பேர் ‘இந்தியா’ கூட்டணியையும் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு குழுவிலும் 6 அல்லது 7 எம்.பி.க்கள் இடம்பெற்றுள்ளனர். ஒவ்வொரு குழுவும் 4 அல்லது 5 நாடுகளுக்கு செல்லும். இந்த நிலையில், ஐக்கிய ஜனதா தள எம்.பி. சஞ்சய் ஜா தலைமையில் 9 பேர் கொண்ட முதல் எம்.பி.க்கள் குழு தனது பயணத்தை தொடங்கியுள்ளது.
டெல்லி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த குழு ஜப்பான், தென்கொரியா, மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் செய்து இந்தியாவின் நிலைபாடு குறித்து விளக்கம் அளிக்கிறது. இதைத் தொடர்ந்து திமுக எம்.பி. கனிமொழி எம்.பி. தலைமையிலான குழு நாளை (22-ந்தேதி) ரஷ்யா புறப்பட்டு செல்கிறது. இந்த குழு அங்கிருந்து ஸ்பெயின், கிரீஸ், லாத்வியா, சுலோவேனியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறது. கனிமொழி எம்.பி. இடம் பெற்ற இந்த குழு பயணத்தை முடித்துக்கொண்டு ஜூன் 2-ந்தேதி நாடு திரும்புகிறது.அனைத்து கட்சி எம்பிக்கள் அடங்கிய குழுக்களுக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம் : ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட எம்பிக்கள் குழு ஜப்பான் புறப்பட்டது!! appeared first on Dinakaran.