ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக 7 குழுக்கள் அமைத்த மத்திய அரசு

4 hours ago 1

 

டெல்லி,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா தலத்தில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டஸ் பிரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 7ம் தேதி பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதையடுத்து, இந்தியா மீது ஏவுகணை, டிரோன்கள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியாவும் டிரோன்கள், ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர். 3 நாட்கள் நடந்த சண்டை பின்னர் இருதரப்பு சண்டை நிறுத்த ஒப்பந்தத்திற்குபின் 10ம் தேதி முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு தெரியப்படுத்தவும், பயங்கரவாதத்திற்கு எதிராக நட்பு நாடுகளை ஒன்றிணைக்கவும் 7 குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் சசி தரூர்( காங்கிரஸ்) ரவி சங்கர் பிரசாத் (பாஜக) , சஞ்சய் குமார் ஜா (ஜேடியு), பைஜயந்த் பாண்டா (பாஜக) , கனிமொழி கருணாநிதி (திமுக) , சுப்ரியா சுலே (என்சிபி), ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே (சிவசேனா) என மொத்தம் 7 எம்.பி.க்கள் இடம்பெற்றுள்ளனர்.

7 எம்.பி.க்கள் தலைமையிலும் 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் இந்தியாவின் நட்பு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளன. மேலும், ஐ.நா. சபை பிரதிநிதிகளையும் சந்திக்க உள்ளன. இந்த குழுக்கள் பஹல்காம் தாக்குதல், அதற்கான இந்தியாவின் பதிலடியான ஆபரேஷன் சிந்தூர், பயங்கரவாதத்திற்கு எதிரான செயல்பாடுகளை தீவிரப்படுத்துதல் உள்ள இந்தியாவின் கருத்துக்களை உலக நாடுகளிடம் தெரிவிக்க உள்ளன. 

Read Entire Article