
ஹாலிவுட் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஆக்சன் படங்களின் பட்டியலில் 'மிஷன்: இம்பாசிபிள்' படங்களுக்கு கண்டிப்பாக இடம் இருக்கும். ஆக்சன் ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும் இந்தப் படத்தின் முந்தைய பாகங்கள் ஹாலிவுட்டில் வெளியாகி வசூல் சாதனை படைத்துள்ளன. சீக்ரட் ஏஜண்டாக டாம் குரூஸ் நடித்து 1996ம் ஆண்டு முதன் முதலில் மிஷன் இம்பாஸிபிள் படம் வெளியானது. முதல்பாகம் பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்ததாக 7-பாகங்கள் வெளியானது. இவை அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றன.
கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை இந்த சீரிஸின் 7 பாகம் வெளியானது. அதில் 'ஏஐ தொழில்நுட்பம்' மையமாக வைத்து முந்தைய பாகம் உருவாக்கப்பட்டது. முந்தைய பாகத்தை இயக்கிய கிறிஸ்டோபர் மெக்யூரி இந்தப் பாகத்தையும் இயக்கி இருந்தார். இந்த பாகத்தில் டாம் எந்த வித டூப் இல்லாமல் மலையில் இருந்து கீழே குதித்த காட்சி இணையத்தில் மிகப்பெரிய வைரலானது. சமீபத்தில் 8ம் பாகத்திற்கான டிரெய்லரை படக்குழு வெளியிட்டது.
இந்தத் திரைப்படத்துக்கான புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அவர் இந்தியாவின் கலாசாரம், மக்கள் மற்றும் சினிமாவின் மீதான தனது அனுபவம் மற்றும் விருப்பம் குறித்து பகிர்ந்துள்ளார். முன்பு தான் இந்தியாவுக்கு வந்த அனுபவங்களைப் பற்றி பேசிய டாம் குரூஸ், அப்போது அவர் தாஜ்மஹால் சென்றதையும், மும்பை நகரத்தில் நேரம் செலவிட்டத்தையும் பற்றி கூறியுள்ளார். மேலும், இந்தியா அற்புதமான மக்களையும், கலாசாரத்தையும் கொண்ட நாடு எனப் புகழாரம் சூட்டியுள்ளார். .
தொடர்ந்து அவர் பேசியதாவது "நான் இந்தியாவுக்கு மீண்டும் சென்று அங்கு ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்று விரும்புகின்றேன். எனக்கு பாலிவுட் படங்கள் மிகவும் பிடித்தமானவை. அதில், நீங்கள் செய்யும் அனைத்துக்கும் தேவையான திறன் இயற்கையாகவே அமைந்துள்ளது. படத்தில் வரும் காட்சி திடீரென பாடலாக மாறுவது எனக்கு மிகவும் பிடிக்கும். நான் அதையே விரும்புகின்றேன். அதைப் போன்ற, பல்வேறு நாடுகளின் பாடல்களை ரசித்தே நான் வளர்ந்துள்ளேன்." என அவர் பேசியுள்ளார்.இத்துடன், பாலிவுட் ஸ்டைலில் திரைப்படம் எடுக்க விரும்புவதாகக் கூறிய டாம் குரூஸ், இந்தியத் திரைப்படங்களில் வரும் ஆடல்களும் பாடல்களும் மிகவும் வேடிக்கையானது மற்றும் அற்புதமானது" எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் டாம் குரூஸின் 'மிஷன்: இம்பாஸிபிள்- தி பைனல் ரெக்கனிங்' திரைப்படம் அமெரிக்காவுக்கு முன்னதாக தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் இன்று இந்தியாவில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது