புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் பாகிஸ்தானில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 40 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியானதாகவும் இந்திய முப்படைகளின் உயர் அதிகாரிகள் நேற்று ஆதாரங்களுடன் விளக்கம் அளித்தனர். பாகிஸ்தான் நடத்திய டிரோன், ஏவுகணை தாக்குதலில் இந்திய ராணுவ தளங்களுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, கடந்த 7ம் தேதி இந்தியாவின் முப்படைகளும் இணைந்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தின. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் 15க்கும் மேற்பட்ட நகரங்களையும் பொதுமக்களையும் குறிவைத்து டிரோன் மற்றும் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்த முயன்றது.
ஆனால் இந்தியாவின் வலுவான வான் பாதுகாப்பு அமைப்புகள், அவற்றை வானிலேயே வழிமறித்து அழித்தன. இரு நாடுகளுக்கு இடையே 4 நாட்களாக மோதல் நடந்த நிலையில், அமெரிக்காவின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, நேற்று முன்தினம் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் மோதலை நிறுத்திக் கொள்வதாக இந்தியாவும், பாகிஸ்தானும் அறிவித்தன.
இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்தும் பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் முகாம்கள் தாக்கப்படுவதற்கு முன்பும் பின்பும் எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் சாட்டிலைட் புகைப்படங்களை வெளியிட்டும், ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் ராஜீவ் காய், மேஜர் ஜெனரல் ஷர்தா, விமானப்படை அதிகாரி ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, கடற்படையின் துணை அட்மிரல் ஏஎன் பிரமோத் ஆகியோர் டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர்.
அதில் அவர்கள் கூறியதாவது: சிந்தூர் ஆபரேஷன் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்ட தீவிரவாத முகாம்களை மட்டுமே குறி வைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. 21 தீவிரவாத முகாம்கள் அடையாளம் காணப்பட்டு, கவனமான ஆலோசனைக்குப் பிறகு முக்கியமான 9 முகாம்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு துல்லியமான ஆயுதங்கள் பயன்படுத்தி தாக்குதல் நடத்தினோம். இதில், யூசுப் அசார், அப்துல் மாலிக் ரவூப், முடாசிர் அகமது உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்கள் புல்வாமா தாக்குதல் மற்றும் கந்தகார் விமான கடத்தலுடன் தொடர்புடையவர்கள்.
இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி டிரோன்கள், ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. அவர்கள் இந்திய நகரங்களையும், பொதுமக்களையும், ராணுவ தளங்களையும் குறிவைத்தனர். அவர்களின் முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டன. வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் பாகிஸ்தானின் அனைத்து டிரோன்கள் வானிலேயே அழிக்கப்பட்டன. இதில் இந்தியாவின் எந்த ராணுவ தளங்களும் சேதமடையவில்லை.
ஆனாலும் மக்களையும், ராணுவ தளங்களையும் குறிவைத்த பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட நினைத்தோம். அதற்காகவே பாகிஸ்தானின் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் முக்கிய ராணுவ தளங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இந்திய வான்வெளியில் அத்துமீறிய பாகிஸ்தான் போர் விமானங்களையும் நாங்கள் சுட்டு வீழ்த்தினோம். இந்த சண்டையில் பாகிஸ்தான் போர் விமானங்கள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன.
4 நாள் மோதலில், பாகிஸ்தான் ராணுவத்தின் 35 முதல் 40 வீரர்கள் வரை பலியாகி உள்ளனர். இந்தியா தரப்பில் 5 வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். அரபிக்கடலில் இந்திய கடற்படையும் அனைத்து திட்டங்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. கராச்சி உள்ளிட்ட முக்கிய பகுதிகள் எங்களின் இலக்காக இருந்தன. ஆரம்பத்தில் இருந்தே இந்தியா போரை விரும்பவில்லை. தீவிரவாதிகளின் முகாம்கள் மட்டுமே எங்களின் குறியாக இருந்தது.
அதை வெற்றிகரமாக அழித்து விட்டோம். அதன்பின் தாக்குதல் நடத்தி நிலைமையை மோசமாக்கியது பாகிஸ்தான் ராணுவம். ஆனால் கடுமையான சேதத்தை சந்தித்த பிறகு போரை நிறுத்த முதலில் வலியுறுத்தியதும் பாகிஸ்தான்தான். இனியும் பாகிஸ்தான் எந்தவொரு தாக்குதல் நடத்தினாலும் அதற்கு வலுவான பதிலடி தர இந்தியாவின் முப்படைகளும் தயாராக உள்ளன. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர். இதே போல, போர் நிறுத்தத்தை தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்றும் நடந்தது. இதில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் மற்றும் முப்படைகளின் தளபதிகள் பங்கேற்று அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்தனர்.
* நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நடத்த ராகுல், கார்கே கடிதம்
பஹல்காம் தீவிரவாத தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டுமென மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் பிரதமர் மோடிக்கு தனித்தனியாக கடிதம் எழுதி உள்ளனர். ராகுல் தனது கடிதத்தில், ‘‘நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் ஒருமனதான கோரிக்கையை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அமெரிக்க அதிபரால் முதலில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் குறித்து மக்களும், அவர்களது பிரதிநிதிகளும் விவாதிப்பது மிகவும் முக்கியம். வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்ள நமது கூட்டு தீர்மானத்தை நிரூபிக்க இது ஒருவாய்ப்பாகவும் இருக்கும். இந்த கோரிக்கையை நீங்கள் தீவிரமாகவும் விரைவாகவும் பரிசீலிப்பீர்கள் என்று நம்புகிறேன்’’ என கூறி உள்ளார். கார்கேவும் தனது கடிதத்தில் இதையே வலியுறுத்தி உள்ளார்.
* போரை இந்தியா விரும்பவில்லை சீனாவிடம் விளக்கம்
இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலுக்கு மத்தியில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பேசியது குறித்து சீன அரசு நடத்தும் சின்ஹுவா ஊடக நிறுவனம் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் போர் இந்தியாவின் விருப்பமல்ல என்றும் பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு தீவிரவாத முகாம்களை அழிப்பது மட்டுமே இந்தியாவின் நோக்கமாக இருந்ததும் என்றும் அஜித் தோவல் விளக்கம் அளித்ததாக கூறப்பட்டுள்ளது. அஜித் தோவலை தொடர்ந்து, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது இஷாக் தாருடனும் வாங் பேசினார்.
* எல்லைப் பகுதிகளில் அமைதி திரும்பியது
போர் நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வருவதாக நேற்று முன்தினம் இரவு அறிவிக்கப்பட்ட அடுத்த சில மணி நேரத்தில் இந்திய எல்லையோர பகுதிகளில் மீண்டும் பாகிஸ்தான் டிரோன்கள் பறந்ததால் பதற்றம் நிலவியது. அவைகளும் வானிலேயே தகர்க்கப்பட்டன. போர் நிறுத்த உடன்பாட்டை பாகிஸ்தான் மீறியதால் மீண்டும் வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டு, காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தானில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. எல்லை கிராமங்களில் மின்தடை அமல்படுத்தப்பட்டது.
இரவு 11 மணிக்கு பிறகு காஷ்மீர் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் குண்டுசத்தங்கள் ஓய்ந்தன. இதனால் நேற்று அமைதி திரும்பியது. காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் எல்லை கிராமங்களில் எந்த டிரோன்களும் தென் படவில்லை. இதனால் எல்லையோர மாவட்டங்களில் நேற்று இயல்பு நிலை திரும்பியது. காஷ்மீரில் வழக்கம் போல் கடைகள் திறக்கப்பட்டு மக்கள் அன்றாட பணிகளில் ஈடுபடத் தொடங்கினர். போக்குவரத்தும் பரவலாக இயங்கத் தொடங்கின.
ராஜஸ்தான் எல்லைப் பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன. காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி துப்பாக்கி சூட்டில் ஈடுபடுவதால் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்த 2 லட்சம் கிராமவாசிகள் அவசரப்பட்டு வீடுகளுக்கு திரும்ப வேண்டாம், தொடர்ந்து பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்குமாறு அம்மாநில போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
* ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை தொடரும்
இந்திய விமானப்படை நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை அழிக்கவே கடந்த 7ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் கீழ், பாகிஸ்தான் தாக்குதல்களுக்கு அடுத்தடுத்து அனைத்து பதிலடிகளும் தரப்பட்டன.
போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் தற்போதும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்கிறது. இது குறித்து சரியான நேரத்தில் விளக்கம் தரப்படும். சரிபார்க்கப்படாத தகவல்களை ஊகிப்பதையும் பரப்புவதையும் தவிர்க்க வேண்டும். ஆபரேஷன் சிந்தூரில் விமானப்படைக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை துல்லியமாகவும் தொழில்முறையுடனும் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளோம்’ என கூறப்பட்டுள்ளது.
* கமாண்டர்களுக்கு முழு அதிகாரம்
போர் நிறுத்தத்திற்குப் பிறகு நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி டிரோன்களை ஏவியதைத் தொடர்ந்து மேற்கு எல்லைகளின் ராணுவ கமாண்டர்களுடன் பாதுகாப்பு நிலை குறித்து ராணுவ தளபதி உபேந்திர திவேதி நேற்று ஆய்வு செய்தார். அப்போது போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தினால் பதிலடி தர ராணுவ கமாண்டர்களுக்கு முழு அதிகாரம் அளிக்கப்படுவதாக அவர் உத்தரவு பிறப்பித்தார்.
The post ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலி: 40 பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டனர், இந்திய ராணுவ தளங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை, முப்படை அதிகாரிகள் பேட்டி appeared first on Dinakaran.