
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் ஆனி பெருந்திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆனி பெருந்திருவிழா வருகிற 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
9-வது நாளான வருகிற 8-ந்தேதி சிகர நிகழ்ச்சியான ஆனி பெருந்திருவிழா தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் சுவாமி, அம்பாள், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட 5 தேர்கள் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டு 4 ரத வீதிகளிலும் வலம் வரும்.
ஆனிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு, பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. சுவாமி, அம்பாள், விநாயகர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட 5 தேர்களையும் தயார்படுத்தும் பணி கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. ரதவீதிகளில் நிறுத்தப்பட்டு இருந்த தேர்களை தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்தனர்.
தொடர்ந்து தேர்களில் அலங்காரம் செய்வதற்காக, அவற்றைச் சுற்றிலும் கம்புகளால் சாரம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்த பின்னர் தேரில் பிரம்மா குதிரைகளை செலுத்துவது போன்ற பல்வேறு மரச்சிற்பங்கள் பொருத்தப்படுகின்றன.