
சென்னை,
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரியாக பூண்டி ஏரி உள்ளது. இதில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல், செம்பரம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.
கிருஷ்ணாநதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா அரசு வருடம் தோறும் தமிழகத்திற்கு 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். அதன்படி ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதியில், விநாடிக்கு 500 கன அடி வீதம் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் திறக்கப்படும் நீரானது, அடுத்த 3 நாட்களில் தமிழ்நாட்டின் எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டுக்கு வந்தடையும். இந்த நீர், பூண்டி அணையில் தேக்கப்பட்டு, சென்னையின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படும்.