ஆதிதிராவிடர் – பழங்குடியினருக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மதிவேந்தன் பதில்

3 months ago 12

சென்னை: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் நலத்திட்டங்களை செயல்படுத்தாமலும், நடைபெறும் முறைகேடுகளை தடுக்காமலும் வேடிக்கை பார்க்கும் திமுக அரசுக்கு கண்டனம் எனும் தலைப்பில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை முற்றிலும் தவறானது என அமைச்சர் மதிவேந்தன் பதில் அறிக்கை விடுத்துள்ளார். அதன் விவரம்: அதிமுக ஆட்சி காலத்தில் தாட்கோவில் பெரும்பாலான மேலாளர் பணியிடங்கள் காலியாக இருந்தன. நிர்வாக நலன் கருதி தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் வாழ்வாதார திட்டங்கள் மற்றும் கடனுதவி வழங்குவதற்கான விண்ணப்பங்கள் விரைவாக பரிசீலனை செய்து வங்கிகளில் உள்ள நிதியினை பயனாளிகளுக்கு வழங்குவதற்கு ஏதுவாக 11 மாவட்ட மேலாளர்கள், 6 உதவி மேலாளர்கள் போன்ற பணியிடங்கள் ஆட்சேர்ப்பு நிறுவனத்தின் மூலம் தற்காலிகமாக நிரப்பப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்களை நிரப்பியதன் மூலம் கடந்த ஆட்சி காலத்தில் வங்கியில் இருந்து விடுக்கப்படாத மானியத்தொகையுடன் இன்றைய தேதிவரை உள்ள ₹100 கோடிக்கான மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், தாட்கோ தொழில்நுட்ப பிரிவில் காலிப்பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டு, பணிகள் நடக்கிறது. தாட்கோ மூலம் ₹600 கோடி மதிப்பீட்டிலான பணிகள் தற்சமயம் நடைபெற்று வருகின்றன. இதுமட்டுமல்லாது, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு தரமான உணவுகளை வழங்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் ‘அமுத சுரபி’ எனும் திட்டம் கடந்தாண்டு தொடங்கப்பட்டு, முன்னோடித் திட்டமாக சென்னை மாநகரில் உள்ள விடுதிகளுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின்படி, பொது சமையலறையிலிருந்து அருகில் உள்ள விடுதிகளுக்கு காலை, மாலை மற்றும் இரவு என 3 வேளைகளிலும் மாணவர்களுக்கு குறித்த நேரத்தில் தரமான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டத்தில் வெங்கடாம்பட்டி ஊராட்சியில், லெட்சுமியூர், ஆறுமுகப்பட்டி ஆதி திராவிடர் காலனியில் உள்ள வீடுகளுக்கு ₹5.10 லட்சத்தில் பணிகள் நிறைவற்று குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, உண்மைக்கு புறம்பான செய்தியை எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார். இதுதவிர, ஒன்றிய அரசால் வழங்கப்படும் நிதியானது இத்துறையால் முழுமையாக பயன்படுத்தப்படுகிறது. கடந்த 2023-24ம் ஆண்டில் பிஎம்ஏஜிஒய் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ₹186 கோடியும், எஸ்சிஏ கிராண்ட்ஸ் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட ₹61 கோடியும் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, எதிர்கட்சி தலைவரின் அறிக்கை தவறான செய்தியாகும்.

அதேபோல், பழங்குடியினர் மேம்பாட்டு வசதிக்காக தொல்குடி என்ற திட்டம் தொடங்கப்பட்டு, அதற்கான அரசு ஆணைகள் தற்போதுதான் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள நிதியினை பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என்பது தவறான செய்தியாகும்.

The post ஆதிதிராவிடர் – பழங்குடியினருக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மதிவேந்தன் பதில் appeared first on Dinakaran.

Read Entire Article