ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைக்கு தீர்வு காணும் ஹெல்ப் டெஸ்க்: ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் ஆனந்த் தகவல்

3 hours ago 2

* மாவட்டந்தோறும் சட்ட ஆலோசனை மையம் விரைவில் திறக்க திட்டம்,

சென்னை: இந்தியாவை பொறுத்தவரை வன்கொடுமைகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீது கட்டவிழ்த்து விடப்படுவது தொடர்கதையாகி வருகின்றன. தீண்டாமை மற்றும் வன்கொடுமைகளுக்கு எதிராக குடிமையியல் உரிமைகள் பாதுகாப்பு சட்டம், வன்கொடுமை தடுப்பு சட்டம், வன்கொடுமை தடுப்பு விதிகள் ஆகிய சட்டங்கள் இந்திய அரசால் இயற்றப்பட்டு, அவை தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் வன்கொடுமைகள் தொடர்ந்து நிகழ்ந்துவரக்கூடிய அவலநிலை என்பது இன்றளவும் உள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை வன்கொடுமை நிகழ்வுகளை தடுப்பதற்கென ஒரு காவல்துறை இயக்குநர், காவல்துறை உதவி தலைவர் மற்றும் மாவட்ட அளவில் 31 காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் 7 காவல் உதவி ஆணையர்கள் மேற்பார்வையில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவுகள் கண்காணித்து வருகின்றன. குறிப்பாக, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களிடையே தீண்டாமைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, ஆண்டுதோறும் ஜனவரி 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை ‘‘மனிதநேய வார விழா’’ நடத்தப்படுகிறது.

மேலும், ஜனவரி 26, ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2 ஆகிய நாட்களில் சமத்துவ விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதேபோல, தீண்டாமை கடைபிடிக்கப்படாமல் பொதுமக்கள் அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழும் கிராமங்கள் தமிழ்நாட்டின், அனைத்து மாவட்டங்களிலும் (சென்னை தவிர்த்து) தேர்ந்தெடுக்கப்பட்டு, அக்கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரும் பொருட்டு தமிழ்நாடு அரசால் ரூ.10 லட்சம் நிதி வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல, ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும்போது வன்கொடுமை நிகழ்ந்த கிராமங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகின்றன. ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகளை தடுக்கும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு எடுத்து வரும் திட்டங்கள் வெறும் வெற்று அறிவிப்புகளாக மட்டுமில்லாமல் அவை திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், தமிழகபேரவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த புகார் அளிக்கவும், சட்ட ஆலோசனைகள் வழங்கவும் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய உதவி மையம் ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை எழிலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை தலைமை அலுவலகத்தில் இதற்கான ‘ஹெல்ப் டெஸ்க்’ கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. தற்போது இந்த புகார் மையம் மூலமாக பெறப்பட்ட பல்வேறு புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் ஆனந்த் ‘தினகரன்’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த 2023-24ம் ஆண்டு பேரவையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பின்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகளை தடுக்கும் விதமாகவும், பாதிக்கப்படுபவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கவும் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய உதவி மையம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. ‘‘ஹெல்ப் டெஸ்க்’’ என்று சொல்லக்கூடிய இந்த உதவி மையம் வன்கொடுமையால் பாதிக்கப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்து வருகிறது.

இந்த மையத்தை 18002021989, 14566 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு வன்கொடுமை செய்யப்பட்ட நபர் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து காலை 10 மணி முதல் 6 மணி வரை தெரிவிக்கலாம். அதேபோல், www.nhapoa.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் 24 மணி நேரமும் புகார்களை அளிக்கலாம். அதன் மூலம் அவர்களது புகார் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாவட்ட துணை கண்காணிப்பாளர் (எப்.ஐ.ஆர்) முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வார்.

பாதிக்கப்பட்டவர் புகாரை முழுவதுமாக விசாரணை நடத்தி உண்மை தன்மை கண்டறிந்து அதன் பிறகு உண்மையாகவே பாதிக்கப்பட்டார் என தெரியவந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை 150 புகார்கள் பெறப்பட்ட அதன் மீது தீர்வுகள் காணப்பட்டுள்ளன. வன்கொடுமை புகார்களை எப்படி கையாள்வது, பாதிக்கப்பட்டவர்களுக்கு தீருதவி வழங்குவது என்பன குறித்து பயிற்சி அளிப்பதற்காக சமீபத்தில் மாவட்ட துணை கண்காணிப்பாளர், துணை ஆட்சியர்கள், சார் ஆட்சியர்கள் உள்ளிட்ட 950 அதிகாரிகளுக்கு ரூ.45 லட்சத்தில் பயிற்சி வழங்கி உள்ளோம்.

மேலும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு, கொலை, இறப்பு, பாலியல் துன்புறுத்தல் போன்ற குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு விதிகளின்படி, அரசு வேலை, ஓய்வூதியம் வீட்டுவசதி போன்ற இதர மறுவாழ்வு குறித்த நிவாரண உதவிகளும் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, கடந்த 2021-25ம் ஆண்டு வரையிலான காலக்கட்டங்களில் வேலைவாய்ப்பு 403 பேருக்கும், ஓய்வூதியம் 445 பேருக்கும், வீட்டுமனைப்பட்டா 208 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல, பாதிக்கப்பட்டவர்களுக்கான சட்ட ஆலோசனைகளை பெற நாங்கள் வழக்கறிஞரை நியமித்துள்ளோம். அதன்படி, அவர்களின் அறிவுரைகளின்படி வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவர் நீதிமன்றத்தை நாடலாம். இதுதவிர, மாவட்ட வாரியாக விரைவில் சட்ட ஆலோசனை மையத்தை தொடங்க திட்டமிடப்பட்டு அதற்கான நடவடிக்கை என்பது எடுக்கப்பட்டு வருகின்றன.

* உயர்த்தப்பட்ட தீருதவி தொகை
முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கின் தன்மைக்கு ஏற்றவாறு, ரூ.85 ஆயிரத்திலிருந்து ரூ.8 லட்சத்து 25 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வந்த தீருதவி தொகையை குறைந்தபட்சம் 1 லட்சம் ரூபாயாகவும், அதிகபட்சமாக ரூ.12 லட்சம் ரூபாயாகவும், மாநில அரசு நிதி மூலம் உயர்த்தி வழங்க உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி, பாதிப்புகளுக்கு ஏற்றார் போல் உதவிகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

* தனியுறு சிறப்பு நீதிமன்றங்கள்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தீருதவிகள் மற்றும் மறுவாழ்வு தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக திருச்சி, தஞ்சை, மதுரை, நெல்லை, விழுப்புரம், சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் (ஸ்ரீவில்லிபுத்தூர்), புதுக்கோட்டை கடலூர், நாமக்கல், தேனி, திருவண்ணாமலை, பெரம்பலூர், வேலூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி (நாகர்கோவில்), செங்கல்பட்டு, திருப்பூர், திருவாரூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் 22 தனியுறு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

* வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட விவரம்
வருடம் எண்ணிக்கை
2021ம் ஆண்டு 29 பேர்
2022ம் ஆண்டு 99 பேர்
2023ம் ஆண்டு 175 பேர்
2024ம் ஆண்டு 99 பேர்
2025ம் ஆண்டு 1 நபர்
மொத்தம் 403 பேர்
ஓய்வூதியம் அளிக்கப்பட்டோர்
2021ம் ஆண்டு 126 பேர்
2022ம் ஆண்டு 68 பேர்
2023ம் ஆண்டு 83 பேர்
2024ம் ஆண்டு 167 பேர்
2025ம் ஆண்டு 1 நபர்
மொத்தம் 445 பேர்
வீட்டுமனைப்பட்டா கொடுக்கப்பட்டோர்
2021ம் ஆண்டு 1 நபர்
2022ம் ஆண்டு 41 பேர்
2023ம் ஆண்டு 52 பேர்
2024ம் ஆண்டு 113 பேர்
மொத்தம் 208 பேர்

The post ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைக்கு தீர்வு காணும் ஹெல்ப் டெஸ்க்: ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் ஆனந்த் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article