சென்னை: ஆதிக்க மொழி திணிப்பை தடுத்து, அன்னை தமிழை காப்பேன் என தனது பிறந்தநாளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.
இதுகுறித்து தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு காட்டுகின்ற பாதையே ஒவ்வொரு மாநிலமும் தன் தாய்மொழியை காப்பதற்கான பாதை. ஆதிக்க மொழிகளை அடையாளம் கண்டு, அவற்றின் வலையில் வீழாமல் தடுத்து பயணிக்கும் பாதை என்பதை பஞ்சாப், தெலங்கானா மாநில அரசுகளின் அறிவிப்பு உறுதி செய்திருக்கிறது. அந்தவகையில், பஞ்சாப் மாநிலத்தை ஆள்கின்ற ‘ஆம் ஆத்மி’ கட்சி அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், தனது மாநிலத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் பஞ்சாபி மொழியை முதன்மையாகவும் கட்டாயமாகவும் கற்றுத் தர வேண்டும்’ என தெரிவித்துள்ளது.
தெலங்கானா மாநில காங்கிரஸ் அரசின் சார்பில் வெளியாகியுள்ள உத்தரவிலும், ‘1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை தெலுங்கு மொழியை கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதற்காக இந்த திடீர் அறிவிப்பு? மாநில மொழிகளை வளர்ப்பதற்கும், பரவ செய்வதற்கும்தான் தேசிய கல்விக் கொள்கை மூலம் மும்மொழித் திட்டத்தைச் செயல்படுத்துகிறோம் என்று ஒன்றிய பா.ஜ. அரசு சொல்வது பச்சைப் பொய் என்பதை பஞ்சாப், தெலங்கானா மாநிலங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.
ஒன்றிய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில், பத்தாம் வகுப்புக்கு இரண்டு முறை பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பான வரைவு வெளியிடப்பட்டபோது அதில் மாநில மொழிகள் பலவும் விடுபட்டிருந்தன. இதுகுறித்து பஞ்சாப் மாநில கல்வித்துறை அமைச்சரிடமிருந்து எதிர்ப்புக் குரல் வெளியான பிறகே, சி.பி.எஸ்.இ. வரைவுப் பட்டியல் முழுமையானதல்ல என்றும், எந்த மாநிலத்தின் மொழியையும் எடுக்கவில்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டது.
இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிப்போம். மாநில மொழிகள் அனைத்தையும் வெறுப்போம் என்பதே பா.ஜ..வின் மறைமுக மொழிக் கொள்கை. இதனை நேரடியாகத் தோலுரித்துக் காட்டிய மாநிலம் தமிழ்நாடு. அதன் வழியில் சகோதர மாநிலங்களும் தங்கள் தாய்மொழியைப் பாதுகாக்கும் அரண் அமைக்கும் சட்ட வழிகளை மேற்கொண்டு வருகிறது. ஒரு மாநிலத்தில் பல வகையான பாட திட்டங்களை பின்பற்றக்கூடிய பள்ளிகள் உண்டு. எந்த வகை பாடத்திட்டத்தை பின்பற்றக்கூடிய பள்ளிகளாக இருந்தாலும் அந்தந்த மாநிலங்களின் தாய்மொழி என்பது முக்கியமானது. அதனை இன்று பஞ்சாப்பும், தெலங்கானாவும் உணர்ந்து உத்தரவிட்டிருப்பதை, 20 ஆண்டுகளுக்கு முன்பே தொலைநோக்குப் பார்வையுடன், “தமிழ்நாட்டில் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளிகளிலும் தமிழ் ஒரு மொழி பாடமாக கற்று தரப்பட வேண்டும்” என சட்டமாக நிறைவேற்றியவர் கலைஞர்.
அதன்படி, எதிர்கால மாணவச் சமுதாயத்தினர் தாய்மொழியாம் தமிழைக் கற்க வேண்டியது மிகவும் அவசியம் என்ற தெளிவான பார்வையுடன் நிறைவேற்றப்பட்ட அந்தச் சட்டத்திலும், கலைஞருக்கே உரிய நடைமுறை எதார்த்தத்துடனான கருணையும் வெளிப்பட்டது. தாய்மொழியைக் கற்பதாக இருந்தாலும்கூட அதனை வலிந்து திணிக்கக் கூடாது என்ற முறையில், முதல் ஆண்டில் ஒன்றாம் வகுப்பு எனத் தொடங்கி 10 ஆண்டுகளில் 10ம் வகுப்பு வரை அனைத்துப் பள்ளி மாணவர்களும் தமிழைக் கற்றாக வேண்டும் என்கிற வகையில் அந்தச் சட்டத்தை நிறைவேற்றினார். உங்களில் ஒருவனான எனக்கு தொண்டர்கள் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து, மகிழ்ச்சியைப் பகிர்ந்து, என்னையும் மகிழ வைத்திருக்கிறீர்கள். உங்கள் அன்பான வாழ்த்துகள் என்னை மேலும் உறுதியுடன் உழைப்பதற்கும் இனம்மொழி காக்கும் போராட்டத்தை முன்னெடுப்பதற்கும் ஊக்கமாக அமைந்துள்ளது. “ஆதிக்க மொழித் திணிப்பைத் தடுத்து, அன்னைத் தமிழைக் காப்பேன்!” என இந்தப் பிறந்தநாளில் சூளுரைக்கிறேன்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post ஆதிக்க மொழி திணிப்பை தடுத்து, அன்னை தமிழை காப்பேன்: தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை appeared first on Dinakaran.