ஈரோடு,
அ.தி.மு.க. விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும் அவரைக்காண அந்தியூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் குவிந்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானநிலையில், செங்கோட்டையன் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "என் வீட்டில் தொண்டர்கள் கூடுவது வழக்கமானதுதான். ஆலோசனை ஏதும் நடைபெறவில்லை. பொதுக்கூட்டத்திற்கான அழைப்பிதழ் வழங்கவே நிர்வாகிகள் என்னை சந்திக்க வந்தனர். தினமும் 100, 200 பேர் என்னை சந்திக்க வருவது வழக்கம் தான்.. அந்த விழா (எடப்பாடி பழனிசாமி பாராட்டு விழா) குறித்து நான் பேசியது அத்துடன் முடிந்து விட்டது" என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.
முன்னதாக அத்திக்கடவு- அவினாசி திட்டம் தொடர்பாக முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா கடந்த 9-ந் தேதி கோவை மாவட்டம் அன்னூரில் நடைபெற்றது. இந்த விழாவில் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்து கொள்ளவில்லை.
இதுகுறித்து அவர் விளக்கம் அளிக்கையில், 'அத்திக்கடவு- அவினாசி திட்டம் தொடர்பான பாராட்டு விழாவில் எங்களை அரசியலில் வளர்த்தெடுத்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்கள் இல்லை. மேலும் இந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்கியவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. இதனால் நான் விழாவுக்கு செல்லவில்லையே தவிர புறக்கணிக்கவில்லை என கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.