*கலெக்டர் அலுவலகத்தில் தாய் மனு
சேலம் : சேலத்தில் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள தனது 2 குழந்தைகளையும் மீட்டு தரவேண்டும் என, கலெக்டர் அலுவலகத்தில் தாய் கோரிக்கை மனு அளித்தார். சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்த அருணாச்சலம்புதூர் பகுதியை சேர்ந்தவர் பூங்கொடி (30).
இவர் நேற்று தனது குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார். இதுகுறித்து பூங்கொடி கூறியதாவது: எனக்கும், பழனி என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. எங்களுக்கு 2 மகன், 2 மகள் உள்ளனர்.
இதில் ஒரு மகனுக்கு பிறவிக் குறைபாடும், ஒரு மகளுக்கு பார்வை குறைபாடும் உள்ளது. வீட்டில் அடிக்கடி எங்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறேன். இதில், மாற்றுத்திறன் குழந்தைகள் 2 பேரை மட்டும், எனது கணவர் என்னுடன் அனுப்பினார். மற்ற 2 குழந்தைகளை அவரே பார்த்துக் கொள்வதாக தெரிவித்தார்.
ஆனால் தற்போது அந்த 2 குழந்தைகளும், ஆதரவற்றோர் இல்லத்தில் விடப்பட்டுள்ளனர்.தற்போது என் குழந்தைகளை பார்க்க முடியாமல் தவித்து வருகிறேன். எனவே, இதுகுறித்து விசாரணை நடத்தி, எனது 2 குழந்தைகளையும் மீட்டு என்னிடம் தர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள 2குழந்தைகளை மீட்டு தரவேண்டும் appeared first on Dinakaran.