ஐதராபாத்: ஐதராபாத் பல்கலைக்கழக வளாகத்துக்கு அருகில் காஞ்சா கச்சிபவுலியில் இருக்கும் 400 ஏக்கர் நிலத்தை மறுசீரமைப்பு செய்யும் நோக்கத்தில் தெலங்கானா அரசு ஈடுபட்டுள்ள நிலையில், இதற்கு பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. இந்நிலையில், ஐதராபாத் பல்கலைக்கழக வளாகத்துக்கு அருகில் காஞ்சா கச்சிபவுலியில் இருக்கும் 400 ஏக்கர் நிலத்தை மறுசீரமைப்பு செய்யும் நோக்கத்தில், ஐடி பூங்கா ஒன்றை அமைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு பல்கலைக்கழக மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், மாநிலத்தில் முதலீட்டை ஊக்குவிப்பதே தனது குறிக்கோள் என்றும் மற்றும் அந்த நிலத்துக்கும், பல்கலைக்கழகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அரசு பதிலளித்துள்ளது.
இந்நிலையில், கடந்த மார்ச் 30ம் தேதி மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக புல்டோசர்கள் மற்றும் மண் அள்ளும் இயந்திரங்கள் அப்பகுதிக்குள் கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து காவலர்கள் குவிக்கப்பட்டு, மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கடும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், இந்திய படவுலகின் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்த விஷயத்தை இப்போதுதான் நான் பார்த்தேன். மனம் உடைந்துவிட்டது.
இது சரியில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். அதனுடன், உடைந்த இதய ஈமோஜியையும் பதிவிட்டுள்ளார். இதற்கிடையே, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் மாணவர் குழுக்கள் இத்திட்டம் இப்பகுதியின் பல்லுயிர் பெருக்கத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்தனர். எனினும், அரசு நிலத்தின் உரிமையை கோருகிறது. அதே நேரத்தில், ஐதராபாத் பல்கலைக்கழக பதிவாளர், நில எல்லை இறுதி செய்யப்பட்டு விட்டதாக கூறியுள்ளார். இச்சூழலில், அரசின் காடு அழிப்பு நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், அப்பகுதியில் மரம் வெட்டுவதை தடுக்கும்படி தெலங்கானா அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
The post ஐதராபாத் வன நிலம்; தெலங்கானா அரசுக்கு ராஷ்மிகா கடும் எதிர்ப்பு appeared first on Dinakaran.