திருச்சி: திருச்சி ஏர்போர்ட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று அளித்த பேட்டி: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இது ஒரு கருப்பு தினம் இன்று சொல்லக்கூடிய அளவுக்கு வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை பாஜ அரசு நிறைவேற்றியுள்ளது. தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக அரங்கேற்றியுள்ளனர். இது இஸ்லாமியர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கையாகும். வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்து பீகாரில் 2 எம்பிக்கள் பதவி விலகியுள்ளனர். இது கூட்டணி கட்சிகளுக்கு பெரிய சவுக்கடியாகும்.
ஒன்றிய அரசின் மத விரோத போக்கை கண்டிக்கிறோம். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளோம். ஒன்றிய அரசின் வக்பு வாரிய சட்ட திருத்தத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் விசிக சார்பில் வரும் 8ம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது. திமுக அரசு பதவியேற்றது முதல் நீட் எதிர்ப்பை முழு மனதோடு கடைபிடித்து வருகிறது. விமர்சிக்கப்பட வேண்டியவர்கள் ஒன்றிய ஆட்சியாளர்கள் தான். இவ்வாறு அவர் கூறினார்.
The post வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் 8ம் தேதி ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் அறிவிப்பு appeared first on Dinakaran.