ஜெயங்கொண்டம். அக்.19: ஆண்டிமடம் ஒன்றியத்தில் கலெக்டர் உத்தரவின்பேரில் அனைத்து பள்ளிகளிலும் அடிப்படைவசதிகள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவானந்தம் ஆய்வு மேற்கொண்டார். அரியலுார் மாவட்டம் , ஆண்டிமடம் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் ஆய்வு நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறுதுறை முதல்நிலை அலுவலர்கள் கிராம வாரியாக ஆய்வு செய்ய அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஒதுக்கீடு செய்திருந்தார். அதன்படி அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவானந்தம் ஆண்டிமடம் ஒன்றியத்தில் அனைத்து பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்தும், சத்துணவு மையங்கள் குறித்தும் ஆய்வு செய்தார்.
ஆண்டிமடம் ஒன்றியம் விளந்தை(மே) ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆய்வில் பள்ளியின் அடிப்படை வசதிகள் குறித்தும், மாணவர்கள் கற்றல் திறன், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரத்தினையும் ஆய்வு அப்பள்ளியில் நான்காம் வகுப்பினை பார்வை செயலி மூலம் ஆய்வு செய்தபோது மாணவர்களின் பயிற்சி ஏடுகள், குறிப்பேடுகள், வரைபட, கையெழுத்து பயிற்சி நோட்டுகள் போன்றவற்றினையும் மாணவர்களின் கற்றல் திறனையும் முழுமையாக ஆய்வு செய்தார். அப்போது வகுப்பு ஆசிரியை விஜயலெட்சுமி தமிழ் பாட மாதிரி வகுப்பு நடத்தி காண்பித்தார்.
அனைத்து நிலைகளிலும் சிறப்பான வகுப்பறை செயல்பாடுகளை பாராட்டி முதன்மைக் கல்வி அலுவலர் சிவானந்தம் ஆசிரியருக்கு பொன்னாடை அணிவித்து தொடர்ந்து சிறப்பாக பணியாற்றும் படி அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
The post ஆண்டிமடம் ஒன்றியத்தில் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு appeared first on Dinakaran.