மதுரை,
மதுரையில் சில நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, "ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்" என்று பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சைக்குள்ளானது. இந்த நிலையில் மதுரை அவனியாபுரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மூர்த்தி சர்ச்சைக்குள்ளான பேச்சு குறித்து விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறும்போது, "சிலர் தவறான தகவலை எடிட் செய்து பரப்புகிறார்கள். நான் ஒரு அமைச்சர்; அனைத்து சமுதாய மக்களுக்கும் பொதுவான நபர். அன்று நடந்த நிகழ்ச்சியில், நீங்கள் தற்போது பின்தங்கியிருக்கிறீர்கள். இப்போது படித்து முன்னேறி வருகிறீர்கள். அரசுப் பதவிக்கு வரும் நீங்கள் அனைத்து சமுதாய மக்களையும் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும் என்றுதான் கூறினேன். அந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.
யாரோ வேண்டுமென்றே குறிப்பிட்ட பகுதியை மட்டும் எடிட் செய்து பரப்பியுள்ளனர். நான் ஆண்ட பரம்பரை என்று கூறியது, ராஜராஜ சோழன் காலத்தில் இருந்து ஆண்ட பரம்பரை என்று தான் குறிப்பிட்டேன். இது நேற்று நடந்தது இல்லை. சில மாதங்களுக்கு முன்பு நடந்ததை யாரோ வேண்டுமென்றே இப்போது பரப்புகிறார்கள்" என்று கூறினார்.