ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி தம்பதி

4 hours ago 2

கடலூர், மார்ச் 4: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தம்பதி, மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்தனர். அப்போது சிதம்பரம் அருகே உள்ள வண்டிகேட் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி தம்பதியான வீரப்பன் மகன் ரவி மற்றும் அவரது மனைவி திலகம் ஆகியோர் மனு அளிக்க வந்திருந்தனர். அப்போது திலகம், தான் வைத்திருந்த பையில் இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவரை தடுத்து அவர் மீது தண்ணீரை ஊற்றினார்.

பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி, ரவியிடம் விசாரணை நடத்திய போது, அவர் தனக்கு தன்னுடைய இரு சகோதரிகள் தனக்கு தானமாக சொத்து எழுதிக் கொடுத்து இருந்தனர். தற்போது தனக்கு தெரியாமல் அந்த தான செட்டில்மென்ட்டை ரத்து செய்துவிட்டு அதில் பாதி சொத்தை விற்று விட்டனர். எங்களுக்கு வேறு எந்த வருமானமும் கிடையாது. சொத்தும் கிடையாது. எனவே இது குறித்து நடவடிக்கை எடுத்து எங்கள் சொத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறினார். அப்போது போலீசார் இது குறித்து ஆட்சியரிடம் முறையாக மனு அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்று கூறினர். அதன் பேரில் அந்த மாற்றுத்திறனாளி தம்பதியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதன் பின்னர் திலகத்தை போலீசார் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

The post ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி தம்பதி appeared first on Dinakaran.

Read Entire Article