சென்னை: தமிழ்நாடு’ என்ற பெயரை சிதைக்க நினைத்தவர் இந்த ஆளுநர்தான் என்றும், ஆடு நனைகிறதே என ஓநாய் அழுததாம் என்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். திமுக தலைவர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிராகவே என்றென்றும் சிந்திப்பதையும், தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிப்பதையுமே தனது கொள்கையாகக் கொண்டிருக்கிற பாஜ ஆட்சியாளர்களும், அவர்களின் ஏஜெண்ட்டுகளும் மட்டுமே மொழித் திணிப்பை ஆதரித்து பேசிக் கொண்டிருப்பார்கள். ஆளுநர் ஆர்.என்.ரவி அது போலப் பேசியிருப்பது புதியது மல்ல, பொருட்படுத்த வேண்டியதுமல்ல.
ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுதகதையாக, தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையால் தென்னிந்திய மொழிகளைப் படிக்கின்ற வாய்ப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு கிடைக்கவில்லை என புதுச்சரடு விடுகிறார் ஆளுநர். உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார் என பாஜவும், பாஜ கூட்டணியும் ஆட்சி செய்கின்ற வட இந்திய மாநிலங்களில் எத்தனை வடஇந்திய மொழிகளைப் பள்ளிகளில் கற்றுத் தருகிறார்கள்?
இந்தி ஆதிக்கத்தால் தனது சொந்த மாநிலங்களிலேயே 25க்கும் மேற்பட்ட வட இந்திய மொழிகள் பேச்சு வழக்கையும், எழுத்து வடிவத்தையும் இழந்து அழிந்து போனதையும், அழிவின் விளிம்பில் இருப்பதையும் இந்தத் தொடர் மடலின் மூன்றாவது கடிதத்தில் பட்டியலிட்டு எழுதியிருந்த துடன், அதனைச் சமூக வலைத்தளப் பக்கத்திலும் பதிவிட்டிருந்தேன்.
இந்தி படித்தால் வடமாநிலங்களில் தமிழர்களுக்கு வேலை கிடைக்கும் என்ற ஆசை வார்த்தைகளால் கட்டப்பட்ட பிம்பத்திற்கு மாறாக, இந்தி மட்டுமே அறிந்த அதை மட்டுமே படித்த வடமாநிலங்களைச் சேர்ந்த சகோதர, சகோதரிகள், வளர்ச்சிபெற்ற மாநிலமான தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வரக்கூடிய வகையில் இருமொழிக் கொள்கை நம் மாநிலத்தை உயர்த்தியிருக்கிறது.
தமிழக ஆளுநரும் கூட தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெற்று நிர்வாக வேலை பார்த்துக் கொண்டிருப்பவர் தான். தென்னிந்திய மொழிகளுக்காக போலிக் கண்ணீர் வடிக்கும் ஆளுநர் தென்னிந்திய மொழிகளிலேயே மூத்தமொழியான தமிழ் மொழிக்கு உரிய மரியாதை தராமல், தமிழ்த்தாய் வாழ்த்தை அவமானப்படுத்தியவர். ‘தமிழ்நாடு’ என்ற பெயரை சிதைக்க நினைத்தவர். உலகப் பொது மறையான திருக்குறளைப் படைத்து தமிழின் உலக அடையாளமாகத் திகழும் திருவள்ளுவருக்கு காவி வண்ணம் பூசி கறைப்படுத்தியவர். தமிழர்கள் அனைவரின் கண்டனத்திற்கும் ஆளானவர்.
திமுக 1986ல் இந்தித் திணிப்புக்கு எதிராக அரசியல் சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தைத் தமிழ்நாடு முழுவதும் எழுச்சியோடு நடத்தியது. மாநிலமெங்கும் தீ பரவியது. அந்தப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றேன். தமிழே உயிரெனக் கொண்ட நம் தலைவர் சிறைக் கொடுமைகளைச் சிரித்த படியே எதிர்கொண்டார். பதவி பறிக்கப்பட்டாலும், சிறையில் அடைத்துச் சித்திரவதை செய்தாலும், உயிரையே கொடுக்க வேண்டியிருந்தாலும் ஆதிக்க மொழித்திணிப்புக்கு இடந்தராமல் ஆருயிரான தமிழைக் காப்போம் என்பதில் அப்போதும் இப்போதும் உறுதியாக இருக்கிறது திமுக. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம் ‘தமிழ்நாடு’ என்ற பெயரையே சிதைக்க நினைத்தவர் ஆளுநர் ரவி: தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி appeared first on Dinakaran.