
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) 20-ந் தேதி முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டி தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த தொடருக்கு முன்னதாக இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடைபெற்றனர். முன்னதாக பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் பாதியிலேயே மற்றொரு முன்னணி வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தார். இப்படி குறுகிய காலத்திற்குள்ளேயே 3 முன்னணி வீரர்கள் ஓய்வு பெற்றுள்ளதால் இந்திய டெஸ்ட் அணியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
இந்நிலையில் இந்த 3 வீரர்களுமே சரியான வழியனுப்புதலுக்கு தகுதியானவர்கள் என்று இந்திய முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். எனவே மூவருக்கும் பேர்வெல் போட்டியை நடத்தி வழியனுப்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இது ஒரு மிகப்பெரிய ஆச்சரியம். இரண்டு சிறந்த, வீரர்கள் சில நாட்களுக்குள் ஓய்வு பெறுகிறார்கள். இதனை நான் எதிர்பார்க்கவில்லை. இது நிச்சயமாக எதிர்பாராத ஒன்று. டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு இன்னும் சில ஆண்டுகள் மீதமுள்ளது என்று நான் நினைத்தேன். அவர் இப்போது ஒருநாள் வடிவத்தில் மட்டுமே விளையாடுகிறார்.
அஸ்வின் ஓய்வு பெற்றபோது இதைப் பற்றிப் பேசினோம். பார்டர்- கவாஸ்கர் கோப்பை தொடரின் நடுவில் அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டு இந்தியாவுக்கு திரும்பினார். தற்போது விராட் கோலி ஓய்வு பெற்றுள்ள நிலையில் சில தினங்களுக்கு முன்பு ரோகித் சர்மா விடை பெற்றார்.
அவர்கள் மூவருமே களத்தில் சரியான முறையில் வெளியேற்றத்திற்கு (பேர்வெல்) தகுதியானவர்கள் என்று நான் நினைக்கிறேன். சம்பந்தப்பட்டவர்கள் இதைப் பற்றி பேச வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இது ஒரு சமூக செய்தியாகவும் இருக்கும். நிறைய ரசிகர்கள் ஒன்று சேர்ந்து ஆரவாரத்துடன் அவர்களை வழியனுப்ப வேண்டும்.
ரோகித் நீண்ட நாட்களாக இந்தியாவின் கேப்டனாக இருந்தார். விராட் மிகவும் திறமையான கேப்டன். அந்த இருவர்களில் ஒருவர் இங்கிலாந்து தொடரில் இருப்பதை நீங்கள் விரும்புவீர்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்கள் ஓய்வு பெற்றுள்ளது தேர்வுக் குழுவினருக்கு ஆச்சரியமாக இருக்கும். விராட் கோலியை தேர்வுக்குழுவினர் பின்தொடர்ந்து ஓய்வு முடிவை தடுத்திருக்க வேண்டும்" என்று கூறினார்.