
லண்டன்,
அண்மையில் முடிவடைந்த 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. பாதுகாப்பு பிரச்சினை காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெற்றது. இதில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா தோல்வியே சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றியது.
இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி கூட பெறாமல் தனது பிரிவில் (ஏ பிரிவு) கடைசி இடம் பிடித்து பரிதாபமாக வெளியேறியது. இதனால் அந்த அணியை அந்நாட்டின் பல முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். மேலும் கடந்த ஒருநாள் மற்றும் டி20 உலகக்கோப்பைகளிலும் லீக் சுற்றை தாண்டாத அந்த அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. முன்னதாக உலகிலேயே தங்களிடம்தான் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதாக பாகிஸ்தானை சேர்ந்த சில முன்னாள் வீரர்கள் கூறினர்.
இந்நிலையில் தங்களிடம் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதாக பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் நினைப்பதாக இங்கிலாந்து முன்னாள் வீரர் மொயீன் அலி தெரிவித்துள்ளார். ஆனால் உண்மையிலேயே அவர்கள் சிறந்தவர்கள் கிடையாது என்று அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "பாகிஸ்தானில் உள்ள மக்கள் பாகிஸ்தான் அணியில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர் என்ற கருத்தை கொண்டுள்ளனர். ஆனால் நான் அப்படியில்லை. அவர்கள் நல்ல பவுலர்கள். ஆனால் அவர்கள் சிறந்தவர்கள் அல்ல. நசீம் ஷா, ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவூப் ஆகியோர் நல்ல பவுலர்கள். இப்படி சொல்வதற்காக என்னை தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அவர்களை நான் மோசமானவர்கள் என்று அழைக்கவில்லை. ஆனால் அவர்கள் தற்சமயத்தில் உலகின் சிறந்த பவுலர்கள் கிடையாது" என்று கூறினார்.