
கேப்டவுன்,
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) 20-ந் தேதி முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு உட்பட்ட இந்த தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
இதற்கிடையே 38 வயதான கேப்டன் ரோகித் சர்மா டெஸ்டில் இருந்து கடந்த வாரம் விடைபெற்றார். இதைத்தொடர்ந்து 36 வயது நட்சத்திர பேட்ஸ்மேன் விராட்கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த திங்கட்கிழமை அறிவித்தார். ரோகித் சர்மா 67 டெஸ்டில் ஆடி 12 சதங்களுடன் 4,301 ரன்னும், விராட்கோலி 123 டெஸ்டில் ஆடி 30 சதங்களுடன் 9,230 ரன்னும் எடுத்துள்ளனர்.
அனுபவம் வாய்ந்த இவ்விரு வீரர்களும் டெஸ்டில் இருந்து விலகி இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவர்களது இடத்தை யார் நிரப்புவார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
இந்நிலையில் ரோகித் சர்மா ஓய்வு பெற்றது இந்திய அணிக்கு ஒன்றும் இழப்பல்ல என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டேரில் கல்லினன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விரிவாக பேசிய அவர் கூறுகையில், "டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ரோகித்தின் ஓய்வு தாமதமாகி இருக்கலாம். நேர்மையாக சொல்லப் போனால், அவர் தனது வாழ்க்கை முழுவதும் சொந்த மண்ணில் விளையாடியது போல் வெளிநாட்டில் விளையாடவில்லை. சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரில் ஒரு கேப்டனாக அணியை முன்னின்று வழிநடத்த அவர் தயங்குவதை நாம் பார்த்தோம். எனவே அவர் ஓய்வு பெற்றதை இந்தியாவுக்கு ஒரு இழப்பாக நான் பார்க்கவில்லை" என்று கூறினார்.