அவமதிப்பு வழக்கு: பஞ்சாப் அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

17 hours ago 1

புதுடெல்லி,

பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கவேண்டும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வலியுறுத்தி, பஞ்சாப் - அரியானா எல்லையான கனவுரியில் பஞ்சாப் விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் (வயது 70) கடந்த மாதம் 26-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். அவரது உடல்நிலை மோசமடைந்த போதிலும் சிகிச்சைககு மறுத்து போராட்டத்தை தொடர்கிறார்.

இதற்கிடையே, விவசாயிகளின் கோரிக்கை தொடர்பான வழக்கு கடந்த 18ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது உண்ணாவிரதம் இருக்கும் தலேவாலின் உடல்நிலையை கவனத்தில் கொண்ட நீதிபதிகள், பஞ்சாப் அரசாங்கம் தாமதமின்றி மருத்துவ உதவிகளை வழங்கவேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலேவாலுக்கு மருத்துவ உதவி வழங்குவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை பின்பற்றாததற்காக பஞ்சாப் அரசின் தலைமைச் செயலருக்கு எதிரான அவமதிப்பு மனு தொடர்பாக பஞ்சாப் அரசுக்கு நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தால் அதை இரும்புக் கரம் கொண்டு சமாளிக்க வேண்டும். யாரோ ஒருவரின் உயிருக்கு ஆபத்து அதை ஏன் சீரியசாக எடுத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றி கொள்ள வேண்டும். மருத்துவ உதவி வழங்கப்பட வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை நீங்கள் பின்பற்றவில்லை அதற்கு என்ன காரணம்? என்றனர். மேலும் இந்த வழக்கை சனிக்கிழமைக்கு ஒத்திவைத்தனர். அதுமட்டுமின்றி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருவதற்குள் இந்த வழக்கில் தற்போது வரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து அறிக்கையை பஞ்சாப் அரசு தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Read Entire Article