
பாட்னா,
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதீஷ்குமார் தலைமையில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் அக்டோபர்- நவம்பர் மாதங்களில் அங்கு சட்டசபை தேர்தலை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் முதல்-மந்திரி நிதீஷ்குமார் தலைமையில் மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில் பீகாரில் நிரந்தரமாக வசிக்கும் பெண்களுக்கு அனைத்து அரசு பணிகள் மற்றும் பதவிகளிலும் 35 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளித்தது. அது போல் மாநிலத்தில் இளைஞர்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து அரசாங்கத்துக்கு தேவையான ஆலோசனை வழங்க இளைஞர் ஆணையத்தை அமைக்க ஒப்புதல் அளித்தது.
2016-ம் ஆண்டு அரசு வேலைகளில் பெண்களுக்கு 35 சதவீத இடஒதுக்கீட்டை அரசு அறிமுகப்படுத்தியது. அதில் எந்த மாநிலத்தை சேர்ந்த பெண்களும் இதை பயன்படுத்தி கொள்ளலாம் என கூறப்பட்டது. ஆனால் இப்போது பீகார் மாநிலத்தில் நிரந்தரமாக குடியிருக்கும் பெண்களுக்கு மட்டுமே தகுதி என மந்திரிசபை ஒப்புதல் வழங்கி இருக்கிறது.