
மும்பை,
இங்கிலாந்துக்கு சென்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லீட்சில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 371 ரன்களை இலக்காக நிர்ணயித்த போதிலும் அதை இங்கிலாந்து அணி கடைசி நாளில் வெற்றிகரமாக விரட்டிப்பிடித்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இது பர்மிங்காம் மைதானத்தில் இந்திய அணி பெற்ற முதல் டெஸ்ட் வெற்றி இதுவாகும். இதற்கு முன்னர் இங்கு விளையாடிய 8 டெஸ்டில் ஆடி 7-ல் தோல்வியும் ஒன்றில் டிராவும் கண்டிருந்தது. இந்த வெற்றியின் மூலம் அந்த 58 ஆண்டு கால சோகத்திற்கு தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி முற்றுப்புள்ளி வைத்து அசத்தியது. அத்துடன் பர்மிங்காம் மைதானத்தில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணி என்ற சாதனையையும் இந்தியா படைத்தது.
முன்னதாக தலைமை பயிற்சியாளரான கம்பீரின் கீழ் இந்திய அணி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது. அதனால் அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. மேலும் இந்த இங்கிலாந்து தொடரின் முதல் போட்டியிலும் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக டெஸ்ட் போட்டிகளுக்கு கம்பீர் செட்டாக மாட்டார் என்று குரல்கள் எழுந்தன.
இருப்பினும் கடந்த காலங்களில் வெற்றியே கண்டிராத பர்மிங்காம் மைதானத்தில் தற்போது அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் காரணமாக கம்பீருக்கு ஆதரவு குரல்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் கம்பீர் பற்றி யாரும் எதுவும் சொல்லக்கூடாது என்று இந்திய முன்னாள் வீரரான யோக்ராஜ் சிங் கூறியுள்ளார். ஏனெனில் அவர் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "இந்திய இளம் வீரர்கள் வளர்ந்து நன்றாக விளையாடுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். வீரர்களை ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. அவரை நீக்குங்கள், அவர் அதற்கு தகுதியானவர் அல்ல என்று அவர்களை ஒருபோதும் சொல்லக்கூடாது.
கவுதம் கம்பீர் பற்றி எதுவும் சொல்லக்கூடாது. அவர் மிகச்சிறப்பாக செயல்படுகிறார். யுவராஜ் சிங், கவுதம் கம்பீர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் கிரிக்கெட்டுக்கு திருப்பி தருகிறார்கள், ஏனெனில் கிரிக்கெட் அவர்களுக்கு நிறைய கொடுத்துள்ளது.
எனவே, நாம் அனைவரும் அவர்களை ஆதரிக்க வேண்டும். தொடரை இழந்தால், குறைந்தபட்சம் இந்த குழந்தைகள் (வீரர்கள்) மிகச்சிறப்பாக விளையாடினார்கள் என்று எழுத வேண்டும். ஆனால் தோல்வியை நாம் பொறுத்துக்கொள்ள முடியாது. நீங்கள் தோற்றால் அங்கு இருக்க மாட்டீர்கள். பின்னர் விளக்குங்கள், நீங்கள் வென்றால், நீங்கள் விளக்க வேண்டியதில்லை, இது ஒரு எளிய விஷயம்" என்று கூறினார்.