
சென்னை,
அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி கடந்த 2018ஆம் ஆண்டு நீக்கம் செய்யப்பட்டார். இந்த சூழலில் பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. அணிகளை ஒன்றிணைக்க கே.சி.பழனிசாமி, ஜே.சி.டி. பிரபாகர், பெங்களூரு புகழேந்தி ஆகியோர் கடந்த ஆண்டு ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை அமைத்தனர்.
இதனிடையே கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பு குழு குறித்து காட்டமாக விமர்சனம் செய்திருந்தார். மேலும் கே.சி.பழனிசாமியை அ.தி.மு..கவில் இருந்து நீக்கப்பட்டவர் என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து, தன்னைப் பற்றியும், ஒருங்கிணைப்புக் குழு குறித்தும் எடப்பாடி பழனிசாமி அவதூறாக கருத்து தெரிவித்ததாக கோவை குற்றவியல் கோர்ட்டில் கே.சி.பழனிச்சாமி கிரிமினல் வழக்கு தொடர்ந்தார். மேலும் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கவும் அவர் கோரிக்கை வைத்தார். இவ்வழக்கு விசாரணையின் போது கே.சி.பழனிசாமி தரப்பில் வீடியோ ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி வரும் 15-ம் தேதி நேரில் ஆஜராக கோவை குற்றவியல் கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது.
எடப்பாடி பழனிசாமி வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராவாரா அல்லது வழக்கறிஞர் மூலமாக பதில் அளிப்பாரா என்பது வழக்கு விசாரணை அன்றே தெரியவரும் என்று கூறப்படுகிறது.