ஆப்பிரிக்காவில் கனமழை: பெருக்கெடுத்து ஓடிய வெள்ளப்பெருக்கில் சிக்கி 62 பேர் பலி

2 days ago 3

கின்ஷாசா,

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி கிழக்கு மாகாணமான கிவுவில் மழை வெளுத்து வாங்கியது.

இதன் காரணமாக நங்கன்ஜா நகரில் உள்ள டாங்கன்யிகா உள்பட பல ஏரிகள் நிரம்பின. தொடர்ந்து பெய்த கனமழையால் அந்த ஏரியின் கரை உடைந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் ஏரிக்கரையோரம் அமைந்துள்ள கசாபா கிராமத்தை வெள்ளம் அடித்துச் சென்றது. இதில் அங்கிருந்த பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.

இந்த கட்டிட இடிபாடு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி பலர் அடித்துச் செல்லப்பட்டனர். இதனையடுத்து மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டது. இதில் மீட்பு படையினருக்கு உதவியாக உள்ளூர் மக்களும் இணைந்தனர். அவர்கள் படகுகள் மூலம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றினர்.

எனினும் இதுவரை நடைபெற்ற மீட்பு பணியில் 62 பேர் சடலமாக மீட்கப்பட்டு உள்ளனர். மேலும் 50 பேர் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்ற வருகிறது.

இதற்கிடையே வெள்ளப்பெருக்கால் மின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதனால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. அதனை சரிசெய்து மீட்பு பணியை துரிதப்படுத்த கிவு மாகாண சுகாதாரத்துறை மந்திரி மீட்பு படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Read Entire Article