செய்யாறு: அவதூறு பேச்சு வழக்கு தொடர்பாக செய்யாறு கோர்ட்டில் இன்று சீமான் ஆஜரானார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் வட்டத்துக்கு உட்பட்ட பிரம்மதேசம் கிராமத்தில் கடந்த 21-7-2022ம் ஆண்டு நாம் தமிழர் கட்சி சார்பில், ராஜேந்திரசோழன் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சீமான் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசும்போது, ‘’ராஜேந்திரசோழனின் வரலாறு குறித்து பேசாமல் எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகிய தலைவர்கள் குறித்தும் போலீசார் குறித்தும் அவதூறு பேசியதாக கூறப்படுகிறது. அத்துடன் ஒருமையில் பேசி, ஜாதி, மதம் தொடர்பான உணர்வை தூண்டும் வகையிலும் பேசியதாகவும் செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கில் சீமானை ஆஜராகும்படி செய்யாறு கோர்ட் உத்தரவிட்டதையடுத்து இன்று காலை 10.20 மணியளவில் சீமான் ஆஜரானார். இதையொட்டி கோர்ட் வளாகத்தில் டிஎஸ்பி சண்முகவேல் தலைமையில் 2 இன்ஸ்பெக்டர்கள், 8 எஸ்ஐக்கள் உட்பட 60 போலீசார் பாதுகாப்புக்கு ஈடுபடுத்தப்பட்டனர். கோர்ட்டில் ஆஜரான பின்னர் செய்யாறு பைபாஸ் சாலையில் இன்று நடந்த நாம் தமிழர் கட்சி கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்க சீமான் புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக கோர்ட் வளாகத்தில் சீமான் அளித்த பேட்டி: வரும் சட்டமன்ற தேர்தலில் வழக்கம்போல் மக்களுடன்தான் நாம் தமிழர் கட்சி கூட்டணி அமைக்கும். அரசியல் வியூகர் பிரசாந்த் கிஷோர்-விஜய் சந்திப்பு குறித்து கேட்கிறீர்கள். இதற்கு முந்தையை தலைவர்களான அண்ணா, காமராஜர் ஆகிய யாரும் இதுபோன்ற அரசியல் வியூகர்களை ஆலோசிக்காமல் தேர்தலை சந்தித்தனர். எந்த ெதாகுதியில் எந்த சமுதாய மக்களுக்கு என்ன பிரச்னை என்பதை அறியாத தலைவர் எதற்கு? கத்திரிக்காய் எனக் கூறினால் மேஜையில் வந்துவிடாது. விதைப்போட்டு பாத்தி கட்டி அதற்கேற்ப உழைத்த பின்னரே விளைச்சலை எதிர்பார்க்க முடியும். தற்போது விஜய், உடனே அறுவடை செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறார். அது நடக்காது. இவ்வாறு கூறினார்.
The post அவதூறு பேச்சு வழக்கு விவகாரம்; செய்யாறு கோர்ட்டில் சீமான் ஆஜர்: நடிகர் விஜய் மீது தாக்கு appeared first on Dinakaran.