வீட்டில் உள்ள காய்கறிகளைக் கொண்டு ஆரோக்கியத்தையும், அழகையும் மேம்படுத்தலாம். பண்டிகை காலம் நெருங்குகிறது இந்நேரத்தில் இருக்கும் செலவுகள் போதாதென பார்லர், மேக்கப் எனக் கேட்டால் நிச்சயம் விவாதம்தான் நடக்கும். இதோ சில வீட்டிலிருக்கும் காய்கனிகளைக் கொண்டே பளபள முகம் பெற டிப்ஸ்.
உருளைக்கிழங்கு: சரும அழுக்குகளை நீக்க வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு தோல் நீக்காமல் அரைத்து பின்னர் அதில் ஒரு முட்டை, சிறிது தயிர், பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்து சருமத்தில் தடவி பதினைந்து நிமிடம் ஊறவைத்து, பின்னர் ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும். இளமைத் தோற்றத்தை தக்க வைக்க உருளைக்கிழங்கை அரைத்து, அதில் சிறிது ஆப்பிள் சாஸ் சேர்த்து கலந்து சருமத்தில் தடவி பதினைந்து நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். கண்களின் சோர்வை நீக்க உருளைக்கிழங்கு துண்டுகளை சிறிது நேரம் ஃபிரிட்ஜில் வைத்து பின்னர் அதனை கண்களின் மேல் வைக்க வேண்டும். இதனால் கண்கள் சோர்வுடன் இருக்கும்போது செய்தால் கண்களின் சோர்வானது உடனே நீங்கும்.உருளைக்கிழங்கின் தோலை நீக்கி விட்டு அதனை துண்டுகளாக்கி கண்களின் மேல் இருவது நிமிடங்கள் வைத்தால் கருவளையத்தைப் போக்கும்.
பீட்ரூட்: பீட்ரூட், கேரட், தக்காளி ஆகியவற்றை தலா ஒன்று கொஞ்சம் கறிவேப்பிலையும் இஞ்சியையும் போட்டு அரைத்து தினமும் ஒரு கிண்ணம் ஜூஸ் சாப்பிட்டு வந்தால் இளநரை போய்விடும். பீட்ரூட்டை தோல் சீவி துருவி விழுதாக அரைத்து சிறிது பார்லி தூள், எலுமிச்சைபழச் சாறு சிறிது சேர்த்து கலக்க வேண்டும். இந்த பேஸ்ட்டை முகத்தில் பூசி பத்து நிமிடங்கள் கழித்து கழுவினால் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.பீட்ரூட்டை தோல் சீவி துருவி விழுதாக அரைத்து கைகளில் தடவி ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்து நன்கு காய்ந்தவுடன் கைகளைக் கழுவவும். தொடர்ந்து வாரம் மூன்று முறை செய்து வந்தால் கைகள் மென்மையாகும்.
தர்ப்பூசணி: தர்ப்பூசணியை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை பழச்சாறு சேர்த்து கலந்து அதனை முகத்தில் தடவி உலர வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவிட வேண்டும். இதனால் சருமம் பொலிவோடு இருக்கும்.சருமத்தில் சுருக்கங்கள் அதிகம் இருந்தால் தர்ப்பூசணியை அரைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.தர்பூசணியை உட்கொண்டால் உடல் வறட்சி அடையாமல் இருப்பதுடன் அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுக்கும். இதனால் உடல் எடை அதிகரிக்காது.
– அ.ப.ஜெயபால்
The post அழகுக் கொடுக்கும் அற்புத காய்,கனிகள்! appeared first on Dinakaran.