ஓசூர்… தமிழகத்தின் கொய்மலர் பிரதேசம். ரோஜா தொடங்கி கார்னேஷன், ஜெர்பரா, ஆர்கிட் என பலவிதமான கொய்மலர்கள் இங்கு உற்பத்தியாகி உலகெங்கும் நடைபெறும் நிகழ்ச்சிகளை, நெகிழ்ச்சியான காதல்களை, பிரியம் நிறைந்த நட்புகளை, இனிமையான சந்திப்புகளை அழகாக்கிக் கொண்டிருக்கின்றன. ஆம், பல்வேறு அரசு, குடும்ப, அலுவலக நிகழ்ச்சிகளுக்கான மேடை அலங்காரம், பிடித்தவர்களுக்கும் மரியாதைக்குரியவர்களுக்கும் வழங்கப்படும் பூங்கொத்து கவுரவம் போன்றவற்றுக்கு ஓசூரில் மலரும் கொய்மலர்கள் பெரிய அளவில் அனுப்பி வைக்கப்படுகிறது. இதில் ரோஜா, ஜெர்பரா உள்ளிட்ட மலர் வகைகளை விடவும் மிகக் குறைந்த பரப்பளவில் சாகுபடி செய்யப்படும் மலராக இருக்கும் ஆர்கிட் மலர் ஏற்றுமதிக்கு மிகவும் ஏற்ற மலராக இருக்கிறது. இத்தகைய ஆர்கிட் மலரை தளி அருகில் உள்ள ஆறுப்பள்ளி கிராமத்தில் அமைந்திருக்கும் தனது 3 ஏக்கர் நிலத்தில் நவீன தொழில்நுட்பங்களைக் கையாண்டு சாகுபடி செய்து வருகிறார் கருணானந்த் என்ற இளைஞர். ஆர்கிட் மலர் குறித்தும் ஓசூரின் சிறப்புகள் குறித்தும் ஏகப்பட்ட புள்ளிவிவரங்களை வைத்திருக்கும் கருணானந்தோடு அவரது ஆர்கிட் தோட்டத்தில் உரையாடினோம்.
“கோவை மாவட்டம் பொள்ளாச்சிதாங்க எனக்கு சொந்த ஊரு. அங்கியே பிடெக் டெக்ஸ்டைல் படிச்சேன். அதுக்கப்புறம் 2000 – 2001ல பெங்களூர்ல இருக்குற ஒரு பன்னாட்டுக் கம்பெனில வேலை பார்த்தேன். பெங்களூர்ல குடும்பத்தோட தங்கி 20 வருசம் வேலை பார்த்தாச்சு. எவ்வளவு நாள்தான் இப்படியே மெஷின் மாதிரி வேலை பார்க்குறது? நமக்கு மனசுக்கு பிடிச்ச மாதிரி ஏதாவது பண்ணலாமேன்னு தோனுச்சு. நம்ம பார்க்குற தொழில் மனசுக்கு டென்சன் தராம அமைதியைக் கொடுக்குற பிசினசா இருக்கணும்னு முடிவு பண்னேன். உடனே என்னோட மனைவி நர்மதாகிட்ட இதுபத்தி டிஸ்கஸ் பண்னேன். அவங்களோட ஆலோசனைப்படியே விவசாயம் பண்ணலாம்னு முடிவாச்சி. முதல்ல எங்க ஊர்ப்பக்கம் லேண்ட் வாங்கலாம்னு நினைச்சோம். ஆனா சரியா அமையலை. அப்புறம் ஓசூர் தளி பகுதியில ப்ளோரி கல்சர் நல்லா வரும்னு தெரிஞ்சிக்கிட்டு அதுல இறங்கலாம்னு முடிவு செஞ்சோம். இங்க நிலத்தை வாங்கி விவசாயம் பார்த்தா பெங்களூர்ல நம்ம வேலையையும் பார்த்துக்கலாம்னு ஒரு ஐடியா.
உடனே தளி பக்கத்துல இந்த ஆறுப்பள்ளிங்குற கிராமத்துல 3 ஏக்கர் நிலத்தை வாங்குனோம். இந்தப் பகுதியில ரோஸ், கார்னேஷன், ஜெர்பராதான் அதிகமாக விளையும். ஆனா நாங்க ஆர்கிட்டை தேர்வு செஞ்சோம். தண்ணீர் குறைவா கொடுத்தா போதும். பராமரிப்பு வேலையும் கம்மியா இருக்கும்ங்குறதுதான் இதுக்கு காரணம். இதுபத்தி மேலும் சிலர்கிட்ட கேட்டு தெரிஞ்சுகிட்டோம். 2021ல் சாகுபடியை ஆரம்பிச்சோம். இதுல நான் முதல்ல செஞ்ச வேலை மழைநீர் சேகரிக்குற தொட்டியை அமைச்சதுதான். அதாவது பாலிஹவுஸ்ல விழுற மழைத்தண்ணி நேரடியா இந்தத் தொட்டில வந்து சேருற மாதிரி அரை ஏக்கர்ல அமைச்சோம். நிலத்தடி நீர் உப்பு கலந்ததா இருக்கும். இது பயிர் வளர்ச்சியைப் பாதிக்கும். மழைநீர் நல்ல தூய்மையான நீரா இருக்கும். இதுல பிஎச் அளவு 7க்குள்ளதான் இருக்கும். இது விவசாயத்துக்கு நல்ல பலன் கொடுக்கும். உரத்தை நன்றாக செடிகளுக்கு பகிர்ந்தளித்து இந்த விகிதம் உதவி பண்ணும். இதனால் செடிகள் ஆரோக்கியமா வளரும்.
இதனால பாலிஹவுஸ் அமைக்குறதுக்கு முன்னாடியே மழைநீர் சேகரிப்புத் தொட்டியை அமைச்சிட்டோம். 1 ஏக்கர்ல மழை பெய்ஞ்சா 25 லிட்டர் தண்ணீர் சேகரமாகும். நான் இரண்டரை ஏக்கருக்கு பயன்படுற மாதிரி 50 லட்சம் கொள்ளளவு கொண்ட தொட்டியை அமைச்சேன். அதுக்கப்புறம் ஒரு ஏக்கர்ல பாலிஹவுஸ் அமைச்சி ஆர்கிட் சாகுபடியை ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல எதிர்பார்த்த பூக்கள் கிடைக்கல. ஆனாலும் மனம் தளராம செய்ய வேண்டிய பராமரிப்பு வேலைகளை செஞ்சி பூக்கள் உற்பத்தியை அதிகப்படுத்துனோம். ஆர்கிட் பொதுவா ஒரு ஒட்டுண்ணி தாவரம். இது ரொம்ப பழமையான தாவரமும் கூட. காட்டுல இருக்குற மரங்கள்ல இது வளரும். தானா மண்ணுல வளராது. அதனால நாங்க பாலி ஹவுஸ்க்கு உள்ள நீளமான பெஞ்ச் போன்ற அமைப்பை உருவாக்கி, அதுல தேங்காய் மட்டைகளை அடுக்கி, அதுல ஆர்கிட்ட பதியம் பண்ணிருக்கோம்.
தேங்காய் மட்டையை (பருப்பு நீக்கப்பட்ட கூடு) வாங்கி வந்து கட் பண்ணி, கிளீன் பண்ணி 4 லைனா அடுக்கி அதுல ஒவ்வொன்னுலயும் ஒரு செடியை செருகுவோம். விதைச்செடிகள் 4-6 அங்குலம் சைஸ்லதான் இருக்கும். தாய்லாந்துல இருந்து இறக்குமதி பண்ண இந்தச் செடிகள தேங்காய் மட்டைகள்ல செருகிட்ட பிறகு வாரம் ஒருமுறை தண்ணீர் விடுவோம். அதுக்காக பிரத்யேகமாக பாலிஹவுஸ்ல தெளிப்பு நீர் வசதியை செஞ்சிருக்கோம். இது மழை மாதிரி தூவும். 3 நாளுக்கு ஒருமுறை 19: 19: 19 உரத்தை ஃபாலி யார் ஸ்பிரேயர் மூலமா தெளிப்போம். ஒரு மாசத்துல வேர் இறங்கி செடிகள் நல்லா வளர ஆரம்பிக்கும். வேர் பிடிச்சிட்டா செடி ஸ்ட்ராங் ஆகிடும். அதுக்கப்புறம் சாயாது. அதுக்கப்புறம் இலை விட்டு செடி தளதளன்னு வளரும்.
6வது மாசத்துல செடிகள்ல பூ வர ஆரம்பிக்கும். ஆனா அந்தப் பூக்களைக் கிள்ளிவிட்டு கவாத்து பண்ணணும். பூவை விட்டோம்னா எல்லா சத்தையும் பூக்களே எடுத்துக்கும். செடிக்கு போதுமான சத்து கிடைக்காது. 9 மாசத்துக்குப் பிறகு பூக்களை அறுவடை செய்யலாம். அதுல இருந்து பூக்களின் குவாண்டிட்டி, குவாலிட்டி எல்லாம் நல்லா இருக்கும். ஆரம்பத்துல 2 வாரத்துக்கு ஒருமுறை அறுவடை செய்யலாம். கத்திரிக்கோல் வச்சி பூக்களை கொத்தா கட் பண்ணுவோம். அதனாலதான் இந்தப் பூக்களுக்கு கட் பிளவர்ஸ்னு பேர் வச்சிருக்காங்க.
ஒரு வருசத்துக்குப் பிறகு வாரம் ஒருமுறை அறுவடை செய்யலாம். ஒவ்வொரு வாரமும் 50ல இருந்து 80 கட்டு வரை பூக்கள் கிடைக்கும். 20 பூக்கள் சேர்ந்ததுதான் ஒரு கட்டு. ஒரு ஏக்கர்ல இருந்து சராசரியா 60 கட்டு பூ கிடைக்கும். பெங்களூர்ல இருக்குற பூ வியாபாரிகள் வாகனத்தை எடுத்துட்டு வந்து, அறுவடை செஞ்ச பூக்களை வாங்கிட்டு போவாங்க. ஒரு கட்டு பூவுக்கு ரூ.200ல இருந்து 300 வரை விலை கிடைக்கும். சராசரி ரேட் ரூ.250. இதன்மூலமாக வாரத்துக்கு ரூ.15 ஆயிரம் வருமானமாக கிடைக்கும். ஒரு வருசம் முடிஞ்சி 2வது வருசத்துல 100 கட்டு பூ கிடைக்கும். அப்படியே அடுத்தடுத்த வருசங்கள்ல 2 மடங்கா கிடைக்கும். இப்படியே 8 வருசம் வரை செடிகளை வச்சிருந்து பூக்கள் அறுவடை செய்யலாம்.
ஆர்கிட் சாகுபடியை எல்லோரும் செஞ்சிட முடியாது. பாலிஹவுஸ், பதியனுக்கான படுக்கை, செடின்னு ஆரம்பத்துல ஒரு கோடி ரூபாய் வரை செலவாகும். 3 வருசத்துல போட்ட பணத்தை எடுத்துடலாம். அதுக்கப்புறம் நமக்கு 20 – 30 லட்சம் வருமானம் கிடைக்கும். இதுல 8 – 10 செலவாகும். அதுபோக 10 – 15 லட்சம் லாபமா கிடைக்கும். ஆர்கிட் மலர் உற்பத்தி நல்லபடியா போறதால ஒரு வருசம் கழிச்சி ஒன்றரை ஏக்கர்ல 2வது ஹெட் போட்டு பயிர் செய்ய ஆரம்பிச்சிருக்கேன். இதுல அடுத்த வருசத்துல இருந்து நல்ல வருமானம் கிடைக்கும். இந்த நம்பிக்கைல என்னோட வேலையையும் விட்டுட்டேன். இப்ப ஆர்கிட் மலர்களோடவும், என்னோட குடும்பத்தோடவும் சந்தோசமாக நேரத்தை செலவிடுறேன்’’ எனக்கூறி புன்னகைக்கிறார்.
தொடர்புக்கு:
கருணானந்த்: 99019 03495.
The post அழகு மலர்… அபூர்வ மலர்…அள்ளி அள்ளி வருமானம் தரும் ஆர்கிட் மலர்கள்! appeared first on Dinakaran.