பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஆய்வுக்கு சென்ற அமைச்சர் ராஜேந்திரனை அதிமுக எம்எல்ஏக்கள் சம்பத்குமார், கோவிந்தசாமி ஆகியோர் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 எம்எல்ஏக்களும் கைது செய்யப்பட்டனர். தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே கோபாலபுரத்தில் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இதனை ஆய்வு செய்ய நேற்று காலை தமிழக சுற்றுலா மற்றும் சர்க்கரை ஆலை துறை அமைச்சர் ராஜேந்திரன் வந்தார். அப்போது ஆலையின் நுழைவாயில் பகுதியில் நின்றிருந்த அதிமுக எம்எல்ஏக்கள் சம்பத்குமார், கோவிந்தசாமி ஆகியோர் அமைச்சரை தடுத்து நிறுத்தி, ஆலை செயல்பாடுகள் குறித்து சட்டசபையில் தவறான தகவல் கூறியதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவிக்கவே, பாதுகாப்பிற்காக வந்திருந்த போலீசார், எம்எல்ஏக்கள் மற்றும் அவர்களுடன் வந்த அதிமுகவினரை தடுத்தனர்.
பின்னர், ஆய்வு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அமைச்சரை அழைத்து சென்றனர். அங்கு நடந்த விவசாயிகள் சங்க ஆய்வு கூட்டத்திலும் இரண்டு அதிமுக எம்எல்ஏக்களும் அமைச்சருக்கு எதிராக பேசினர். இதையடுத்து அங்கிருந்த திமுகவினர், இரண்டு எம்எல்ஏக்களும் கூட்டத்தை விட்டு வெளியேறுமாறு கூச்சலிட்டனர். இதனால் திமுக – அதிமுகவினர் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் இரு எம்எல்ஏக்களையும் கூட்ட அரங்கில் இருந்து வெளியேற்றியதுடன், அவர்களை கைது செய்து, தங்கள் வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அவர்களுடன் அதிமுக ஒன்றிய செயலாளர் பசுபதி மற்றும் 19 அதிமுகவினர் உள்ளிட்ட 22 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் சதிஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இச்சம்பவத்தால் சர்க்கரை ஆலை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் உள்பட 22 பேரும் மாலை 5.30 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.
The post அரூர் அருகே ஆய்வுக்கு சென்றபோது தடுத்து அமைச்சருடன் வாக்குவாதம் அதிமுக எம்எல்ஏக்கள் கைது appeared first on Dinakaran.