அருமனை : அருமனை அருகே பணம் தராமல் இழுத்தடிப்பதாக கூறி கடந்த 2 மாதத்துக்கு முன்பு ஏலச்சீட்டு நிறுவனத்துக்கு வாடிக்கையாளர் ஒருவர் பூட்டு போட்டு போராட்டம் நடத்திய நிலையில் நேற்று மீண்டும் 2 பேர் சேர்ந்து அந்த நிறுவனத்துக்கு பூட்டுபோட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவிலை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரபல ஏலச்சீட்டு நிறுவனத்தின் கிளை அருமனை சந்திப்பு பகுதியில் உள்ளது. கடந்த 3 வருடமாக செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில் பலரும் பணம் கட்டியுள்ளனர்.
இந்த நிலையில் இங்கு பணம் கட்டி வந்த அருமனை தூத்தூர்கோணம் பகுதியை சேர்ந்த சதீஷ் பாஸ்கரன் (45), தெற்றிவிளை பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (40) ஆகியோர் நேற்று காலை ஏலச்சீட்டு நிறுவனத்துக்கு வந்தனர்.அப்போது நிறுவனம் திறக்கப்பட வில்லை. இதையடுத்து சதீஷ் பாஸ்கரனும், சதீஷ் குமாரும் தயாராக கொண்டு வந்திருந்த பூட்டுகளை எடுத்து ஏலச்சீட்டு நிறுவனத்தின் 3 ஷட்டர்களையும் திடீரென பூட்டு போட்டு பூட்டினர்.
இந்த ஷட்டர்களை ஏற்கனவே சாவி வைத்து ஊழியர்கள் அடைத்திருந்த நிலையில் பூட்டுக்கே பூட்டு போட்டு விட்டனர். சிலமணி நேரம் கழித்து ஏலச்சீட்டு நிறுவனத்தில் வேலைபார்க்கும் 4 ஊழியர்கள் அங்கு வந்தனர். அப்போது அவர்கள் தங்களின் அலுவலகத்தை பூட்டியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே செல்ல முடியாததால் ஊழியர்கள் 4 பேரும் வெளியே நின்றனர்.
இதுகுறித்து சதீஷ் பாஸ்கரன் கூறுகையில், நான் இந்த ஏலச்சீட்டு நிறுவனத்தில் ரூ.3 லட்சம் செலுத்தி சீட்டு கட்டி முடித்தேன். ஆனால் இந்த நிறுவன ஊழியர்கள் இதுவரை எனது பணத்தை கொடுக்காமல் அழைக்கழித்து வருகின்றனர். எனவே எனக்கு பணம் கொடுக்கும் வரை இங்கு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளேன் என்றார்.
அவருடன் வந்திருந்த சதீஷ் குமார் கூறுகையில், நானும் இந்த நிறுவனத்தில் சீட்டுப்பணம் ரூ.2 லட்சத்து 85 ஆயிரம் கட்டியிருந்தேன். ஆனால் எனக்கும் பணம் கொடுக்காமல் அலைக்கழித்தனர். இதனால் நான் கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி இதேபோல இந்த ஏலச்சீட்டு நிறுவனத்திற்கு பூட்டு போட்டு காத்திருப்பு போராட்டம் நடத்தினேன்.
அப்போது போலீசார் முன்னிலையில் ஏலச்சீட்டு நிர்வாகத்தினர் எனக்கு ரூ.1 லட்சம் கொடுத்தனர். மீதமுள்ள ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை ஒரு மாதத்துக்குள் தந்துவிடுவதாக எழுதிக்கொடுத்தனர். ஆனால் தற்போதுவரை எனக்கு மீதமுள்ள தொகையை தரவில்லை. எனவே அப்போது போராட்டம் நடத்தியது போல என்னைப்போலவே ஏமாந்திருக்கும் சதீஷ் பாஸ்கரனுடன் சேர்ந்து ஏலச்சீட்டு நிறுவனத்துக்கு பூட்டு போட்டுள்ளோம். எங்களுக்கான பணத்தை தரும்வரை காத்திருப்பு போராட்டத்தை தொடருவோம் என்றார்.
இதுகுறித்து தகவலறிந்த அருமனை போலீசார் உடனே அங்கு வந்தனர். போராட்டம் நடத்திய 2 பேரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அருமனை இன்ஸ்பெக்டர சாந்தி இரு தரப்பினரிடமும் நடத்திய பேச்சுவார்த்தையில் ஒரு மாதத்திற்குள் இருவருக்கும் கொடுக்கவேண்டிய பணத்தை கொடுப்பதாக ஏலச்சீட்டு நிறுவன உரிமையாளர் உறுதியளித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.ஏலச்சீட்டு நிறுவனத்துக்கு 2வது தடவை பூட்டுபோட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post அருமனை அருகே பணம் தராமல் இழுத்தடிப்பு ஏலச்சீட்டு நிறுவனத்துக்கு மீண்டும் பூட்டு போட்ட வாடிக்கையாளர்கள் appeared first on Dinakaran.