நல்லம்பள்ளி, மே 8: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் பாளையம்புதூர் பகுதியில், ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்தில் பாளையம் புதூர், சிவாடி, பாகல அள்ளி, தண்டுகாரம்பட்டி, கொட்டுப்பட்டி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு பிரசவம், விபத்து ஏற்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை மற்றும் மற்ற உடல் ரீதியான பிரச்னை உள்ளவர்களுக்கும் மருத்துவம் பார்த்து வருகின்றனர். இதன் காரணமாக தினமும் 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
தற்போது அதிக மக்கள் வருவதால், இடப்பற்றாக்குறை நிலவுகிறது. சுகாதார நிலையத்தை மேம்படுத்துவதற்காகவும் கடந்த ஆண்டு ஒன்றிய பொது சுகாதார நிலையம் புதியதாக கட்டத் தொடங்கினர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட நிலையில், திறப்பு விழா காணாமல் பூட்டியே உள்ளது. எனவே, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு கட்டி முடிக்கப்பட்ட ஒன்றிய பொது சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post மூடிக்கிடக்கும் பொது சுகாதார நிலையம் appeared first on Dinakaran.